தொற்றின் நிமித்தம் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் அடைபட்டிருக்கும்போது, எங்களுடைய குடும்பம் ஓர் உத்வேகமான முயற்சியை ஏறெடுத்தோம். பதினெட்டாயிரம் துண்டுகளை ஒன்றிணைக்கும் ஒரு புதிர் விளையாட்டை மேற்கொண்டோம். அந்த விளையாட்டை ஒவ்வொரு நாளும் நாங்கள் விளையாடினாலும், அது முடிவடைவதாக தெரியவில்லை. நாங்கள் அதைத் துவங்கி ஐந்து மாதங்கள் ஆன பின்பு, ஒன்பதுக்கு ஆறடி அளவுள்ள அந்த படத்தின் கடைசி துண்டை இணைத்தோம். அது எங்கள் உணவு அறையின் தளம் முழுவதையும் நிரப்பிற்று.
சிலவேளைகளில் என்னுடைய வாழ்க்கை இந்த பெரிய புதிரின் துண்டுகளைப் போல் தளத்தில் சிதறியிருக்கிறது. தேவன் என்னை முற்றிலும் இயேசுவைப் போல் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்னும் நிஜத்தை நான் தெரிந்துகொள்ளும்போதும், அது ஒழுங்காய் நிறைவுபெறாததுபோலவே தெரியும்.
பிலிப்பியர்களுக்கு எழுதிய நிருபத்தில் பவுல், அவர்கள் செய்த நல்ல கிரியையின் காரணமாக அவர்களுக்காக மகிழ்ச்சியுடன் ஜெபிப்பதாகக் கூறி அவர்களை ஊக்குவித்தது எனக்கு ஆறுதலளித்தது (1:3-4). ஆனால் அவருடைய நம்பிக்கை அவர்களுடைய திறமைகளில் அல்ல, “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று” (வச. 5) நம்புகிறார்.
தேவன் அவருடைய கிரியையை நமக்குள் நிறைவாக்குவார் என்று வாக்களித்திருக்கிறார். அந்த புதிரைப் போல நம்முடைய வாழ்க்கையில் அதிக கவனம் தேவைப்படுகிற காரியங்கள் இருக்கலாம். சில எந்த வளர்ச்சியும் இல்லாமல் தேங்கியிருக்கலாம். ஆனால் நம்முடைய உண்மையுள்ள தேவன் நம்முடைய சிதறிய துண்டுகளை நிச்சயமாய் ஒன்று சேர்த்து நம்மை நிறைவாக்குவார் என்று நாம் உறுதியாய் நம்பலாம்.
தேவன் நம்முடைய வாழ்க்கையில் கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் எப்படி நம்புவீர்கள்? உங்கள் வாழ்க்கையில் துண்டுகளாய் இருந்த எந்த பகுதிகளை அவர் ஒன்றிணைத்து அழகாய் மாற்றியிருக்கிறார்?
பரலோகப் பிதாவே, நீர் என்னுடைய வாழ்க்கையில் செய்யும் கிரியைகளைக் காணும்படிக்கு விசுவாசக் கண்களை எனக்கு தந்தருளும்.