அந்த இளம்பெண்ணின் முகம் கோபத்தையும் அவமானத்தையும் பிரதிபலித்தது. 2022 குளிர்கால ஒலிம்பிக்கின் பனிச்சறுக்கு விளையாட்டில் அவள் பெற்ற வெற்றி இணையற்றது. பல தங்கப் பதக்கங்களை அவள் வென்றிருக்கிறாள். ஆனால் தடைசெய்யப்பட்ட ஒரு போதை வஸ்தை அவள் எடுத்திருக்கிறாள் என்று மருத்துவ பரிசோதனை நிரூபித்தது. அதிக எதிர்பார்ப்பும் மக்களுடைய கண்டனங்களின் அழுத்தமும் தாங்க முடியாத அவள், தொடர்ந்த அவளுடைய விளையாட்டு பயணத்தில் பலமுறை தடுமாற்றம் கண்டு விழுந்திருக்கிறாள். அந்த மறைவான குற்றத்திற்கு முன்பு அவள் தன்னுடைய விளையாட்டில் சுதந்தரமாகவும் உத்வேகத்துடனும் விளையாடினாள். ஆனால் அவளுடைய இந்த விதி மீறல், அவளுடைய கனவுகளை நொறுக்கியது.
மனுஷீகத்தின் ஆரம்ப நாட்களில், மனிதனுடைய சுயசித்தத்தை செயல்படுத்துகிற வேளையில் கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை தேவன் வெளிப்படுத்தினார். உடைக்கப்படுகிற அனுபவமும் மரணமும் பாவத்தின் விளைவு என்பதினால், ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமை பாவத்தின் பாதிப்புகளை முழு மனுஷீகத்திற்கும் கொண்டுவந்தது (ஆதியாகமம் 3:16-19). ஆனால் அச்சம்பவம் அப்படி முடிந்திருக்கவேண்டியதில்லை. தேவன் அவர்களிடம், “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” (2:16-17) என்று கட்டளையிடுகிறார். அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு, அவர்கள் தேவர்கள் போலாகலாம் என்று எண்ணி, தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை அவர்கள் புசிக்கின்றனர் (3:5; 2:17). அதினிமித்தம் மனுஷீகம் பாவம், அவமானம் மற்றும் மரணம் ஆகியவற்றுக்கு உட்படவேண்டியதாயிற்று.
தேவன் நமக்கு சுயசித்தத்தையும், அநேக காரியங்களை அனுபவிக்கும் அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார் (யோவான் 10:10). நாம் நன்மையை அனுபவிக்கவேண்டும் என்று நம் மீதான அவருடைய அன்பினிமித்தம் அவருக்கு கீழ்ப்படிய நமக்கு அழைப்புக் கொடுக்கிறார். நாம் கீழ்ப்படிதலை தெரிந்துகொள்ளவும், இலச்சை இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை சுதந்தரித்துக்கொள்ளவும் அவர் நமக்கு உதவிசெய்வாராக.
இந்த உலகம் சுயசித்தத்தை எப்படி பார்க்கிறது? தேவனுக்கு கீழ்;ப்படிவதும் அவருடைய வழிகளை தெரிந்துகொள்வதும் ஏன் நம்முடைய சுயசித்தத்தில் எடுக்கவேண்டிய தீர்மானமாயிருக்கிறது?
தகப்பனே, உமக்கு கீழ்ப்படிவதன் மூலம் மெய்யான சுதந்திரத்தையும் ஜீவனையும் எனக்கு தந்ததற்காய் உமக்கு நன்றி.