நான் திருச்சபையின் வாலிபர் குழு தலைவியாய் பொறுப்பேற்று, பல வாலிபர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த வேளையில், ஒரு ஞாயிற்றுக்கிழமையின்போது தன் தாயின் அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு இளம் வாலிப பெண்ணிடம் பேசினேன். அதிக வெட்கப்படும் அந்த பெண்ணைப் பார்த்து, ஒரு புன்னகையோடு அவளுடைய பெயரை நான் சொல்லி அழைத்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டேன். அவள் தன்னுடைய தலையை உயர்த்தி, அழகான கண்கள் விரிய என்னைப் பார்த்து, “உங்களுக்கு என்னுடைய பெயர் ஞாபகம் இருக்கிறதா?” என்று ஆச்சரியமாய் கேட்டாள். வயதில் மூத்தவர்களாய் நிறைந்திருந்த அந்த திருச்சபையில் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டு அழைத்ததால், அவளுடன் நம்பிக்கையான ஒரு உறவை ஏற்படுத்த என்னால் முடிந்தது. அவளை ஒரு பொருட்டாக எண்ணுகிறார்கள் என்ற நம்பிக்கை அவளுடைய சுயமதிப்பை கூடச் செய்தது.
ஏசாயா 43ஆம் அதிகாரத்தில் அதேபோன்ற ஒரு செய்தியை இஸ்ரவேலர்களுக்கு சொல்லும்படிக்கு தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை பயன்படுத்துகிறார். தேவன் இஸ்ரவேலர்களை காண்கிறார் மற்றும் அவர்களை மதிப்பிடுகிறார் என்பதே அச்செய்தி. சிறையிருப்பிலும் வனாந்திரத்திலும் தேவன் அவர்களைக் கண்டு அவர்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார் (வச. 1). அவர்கள் வேறுயாரோ அல்ல; அவர்கள் தேவனுக்கு சொந்தமானவர்கள். அவர்கள் கைவிடப்பட்டவர்களாய் தெரிந்தாலும், அவர்கள் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள், அவர்களைக் குறித்த அவருடைய அன்பு மாறாதது (வச. 4). தேவன் அவர்களை பேர்ச் சொல்லி அழைக்கிறார் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டுவதின் மூலம் அவர்களுடைய அந்த இக்கட்டான தருணத்தில் தேவன் அவர்களுக்கு செய்யப்போகிற நன்மைகளை அறிவிக்கிறார். அவர்கள் பாடுகளின் பாதையில் பயணிக்கும்போது தேவன் அவர்களோடே இருப்பார் (வச. 2). தேவன் அவர்களின் பெயர்களை அறிந்திருப்பதால் அவர்கள் பயப்படவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை.
நாம் நம்முடைய வாழ்க்கையின் ஆழமான ஆழிகளைக் கடக்கும்போது தேவன் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரின் பெயர்களையும் அறிந்திருக்கிறார் என்பதே நமக்கான நற்செய்தி.
இன்று நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் என்னென்ன? தேவன் உங்களுடைய பெயரை அறிந்திருக்கிறார் என்னும் சத்தியம் இதுபோன்ற தருணங்களில் உங்களுக்கு எவ்விதம் ஆறுதலாயிருக்கிறது?
அன்பான தேவனே, என்னுடைய பெயரை அறிந்திருப்பதால் உமக்கு நன்றி.