எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் பாட்டிமார்களின் மூளையை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு முன்பாக அவர்களுடைய மகனுடைய போட்டோவையும், பேரக் குழந்தையின் போட்டோவையும், அவர்களுக்கு அறிமுகமில்லாத இன்னொரு குழந்தையின் போட்டோவையும் காண்பித்து அவர்களின் உணர்ச்சி அனுதாபங்கள் பரிசோதிக்கப்பட்டது. அதில் தங்களுடைய சொந்த பிள்ளைகளை விட தங்கள் பேரப்பிள்ளைகளின் மீதான அனுதாபங்கள் அவர்களுக்கு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடைய சொந்த பிள்ளையைக் காட்டிலும் பேரப்பிள்ளைகள் அதிக அபிமானமாக தெரிவதால், இதனை “அழகான காரணி” என்று அழைக்கின்றனர். 

“இதிலென்ன ஆச்சரியம்” என்று நீங்கள் சொல்லுவதற்கு முன்னால் அந்த ஆராய்ச்சியை செயல்படுத்திய ஜேம்ஸ் ரில்லிங் என்பவரின் கூற்றைக் கேட்போம். அவர், “அவர்களின் பேரக்குழந்தை சிரிக்கும்போது, பாட்டியும் சிரிக்கிறாள்; அவர்களின் பேரக்குழந்தை அழும்போது, பாட்டி, அதின் வலியையும் வேதனையையும் உணருகிறாள்” என்று சொல்லுகிறார். 

தேவன் தன்னுடைய ஜனத்தைப் பார்க்கும்போது அவருடைய “எம்.ஆர்.ஐ ஸ்கேனை” ஒரு தீர்க்கதரிசி வரைகிறார்: “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதனை சிலர் வேறுவிதமாகவும் மொழிபெயர்க்கின்றனர்: நீ அவருடைய இருதயத்தை திருப்தியடையச் செய்வாய், அவர் கெம்பீரமாய் பாடுவார்.” ஒரு அன்பான பாட்டியாய் தேவன் நம்முடைய வேதனையை அறிகிறார். “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (ஏசாயா 63:9). “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்” (சங்கீதம் 149:4). 

நாம் சோர்வுறும்போது, நம்மைக் குறித்த தேவனுடைய உணர்வுகள் மெய்யானவைகள் என்பதை நினைவுகூருவது நல்லது. அவர் நம்மை பொருட்படுத்தாமல் எங்கேயோ தூரத்தில் வாழும் தேவனல்ல. அவர் நம்மில் மகிழ்ந்திருக்கிற தேவன். இது அவரை நாம் கிட்டிச்சேருகிற நேரம். அவருடைய புன்னகையை உணருவோம்; அவர் பாடலைக் கேட்டு ரசிப்போம்.