சில ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவமனையில் மிகுந்த சரீர பெலவீனத்தோடு இருந்த என்னுடைய தாயாரை நான் பராமரிக்கவேண்டியிருந்தது. அவருடைய கடைசி நான்கு மாதங்கள் அவரை பராமரிக்க கர்த்தர் எனக்கு உதவிசெய்தார். அவருடைய இழப்பின் துக்கத்தை தாங்கும்பொருட்டு தேவன் என்னை பெலப்படுத்தவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். என்னுடைய இந்த பல்வேறு போராட்டங்களின் மத்தியில் தேவனை துதிக்க பிரயாசப்பட்டேன். ஆனாலும் என்னுடைய தாயார் தன்னுடைய இறுதி மூச்சை விடும் வேளையில் நான் கட்டுப்பாட்டை மீறி, “அல்லேலூயா” என்ற முணுமுணுத்தேன். சில ஆண்டுகள் கழித்து சங்கீதம் 30ஐ நான் வாசிக்கும் வரையில், அந்த இக்கட்டான வேளையில் நான் தேவனுக்கு நன்றி சொல்லி துதித்ததைக் குறித்து நான் குற்றமனசாட்சியுடன் இருந்தேன். 

ஆலயப் பிரதிஷ்டையின்போது பாடப்பட்ட இந்த சங்கீததத்தில், தாவீது தேவனுடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றிசெலுத்துகிறார் (வச. 1-3). அவருடைய பரிசுத்த நாமத்தை துதியுங்கள் என்று மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார் (வச. 4). மேலும் தேவன் கஷ்டத்தையும் நம்பிக்கையையும் எவ்விதம் ஒன்றாகப் பிணைக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார் (வச. 5). துக்கம், மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் திகைப்பு என்று பல உணர்வுகளை பகிர்கிறார் (வச. 6-7). தேவனுடைய உதவிக்காக ஏறெடுக்கப்பட்ட அவருடைய கதறல்கள், தேவன் மீதான அவருடைய நம்பிக்கையை காண்பிக்கிறது (வச. 7-10). தாவீதின் அழுகை, நடனம், துக்கம் மற்றும் மகிழ்ச்சியின் தருணங்களோடு அவரது துதி சத்தமும் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது (வச. 11). பாடுகளை சகித்துக்கொள்வதின் இரகசியத்தையும், சிக்கலான தன்மையையும் ஒப்புக்கொள்வது போலவும், தேவனுடைய கிருபையை முற்றிலும் சார்ந்துகொண்டு, தாவீது தேவனுக்கு தன்னுடைய பக்தியை பிரதிபலித்தான் (வச. 12).

தாவீதைப் போல நாமும் “என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்” (வச. 12) என்று பாடலாம். நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோமோ அல்லது காயப்பட்டிருக்கிறோமோ, தேவன் மீதான நம்முடைய நம்பிக்கையை பிரதிபலிக்கச்செய்து, மகிழ்ச்சியான துதி சத்தத்தோடும் கண்ணீரின் துதிகளோடும் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.