அறியாத ஒரு எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பொதுவாய் அதுபோன்ற அழைப்புகளை நான் எடுப்பதில்லை. ஆனால் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அதில் பேசிய நபர், ஒரு சிறிய வேதாகம செய்தியை ஒரு நிமிடத்தில் பகிர்ந்துகொள்ளலாமா என்று கேட்டார். அவர் வெளிப்படுத்தல் 21:3-5இல் உள்ள “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்” என்ற வசனத்தைக் குறிப்பிட்டு, இயேசுவைக் குறித்தும் அவர் நமக்குக் கொடுக்கும் நிச்சயத்தைக் குறித்தும் குறிப்பிட்டார். நான் இயேசுவை ஏற்கனவே என் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னேன். அவர் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. நான் அவரோடு சேர்ந்து ஜெபிக்க அவர் விரும்பினார். அவர் எனக்காய் ஜெபிக்கும்போது, என்னுடைய ஊக்கத்திற்காகவும் பெலத்திற்காகவும் ஜெபித்தார். 

அந்த அழைப்பானது வேதத்தில் இடம்பெற்றுள்ள, சிறுவன் சாமுவேலின் அழைப்பை எனக்கு நினைவுபடுத்தியது (1 சாமுவேல் 3:4-10). சாமுவேல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அது ஆசாரியனாகிய ஏலியின் சத்தம் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் ஏலியின் ஆலோசனையின் பேரில் கடைசி முறை தேவனுடைய சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில், “சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வச. 10) என்று பதில் சொன்னான். அதுபோல இரவும் பகலும் தேவன் நம்மோடு பேசக்கூடும். நாம் அவருடைய சத்தத்தை உடனே அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்றால், அவருடைய சமூகத்தில் அதிக நேரம் செலவழிக்கிறவர்களாய் இருக்கவேண்டும். 

அந்த அழைப்பை நான் வேறொரு கோணத்திலும் சிந்தித்தேன். நாம் மற்றவர்களுக்கு தேவனுடைய தூதுவர்களாகவும் செயல்பட நேரிடலாம். நாம் மற்றவர்களுக்கு எந்தவிதத்தில் உதவிசெய்யக் கூடும் என்று எண்ணத் தோன்றலாம். தேவனுடைய ஆலோசனையோடு, யாரையாவது தொலைபேசியில் அழைத்து, “நான் உங்களுக்காக இன்று ஜெபிக்கலாமா?” என்ற கேட்க முற்படலாம்.