பாவங்களை களையெடுத்தல்
எங்கள் தாழ்வாரத்தில் தோட்டக் குழாய்க்கு அடுத்ததாக ஒரு தளிர் துளிர்ப்பதை நான் கவனித்தபோது, அதனால் என்னவாகப்போகிறது என்று புறக்கணித்தேன். ஒரு சிறிய களை எப்படி நமது புல்வெளியைக் காயப்படுத்தும்? ஆனால் வாரங்கள் செல்ல செல்ல, அந்த களை ஒரு சிறிய புதரின் அளவு வளர்ந்து எங்கள் முற்றத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதன் தேவையற்ற தண்டுகள் எங்கள் நடைபாதையின் ஒரு பகுதியில் வளைந்து மற்ற பகுதிகளில் முளைத்தன. அதன் அபாயகரமான வளர்ச்சியைப் புரிந்துகொண்ட நான், என் கணவரின் துணையோடு காட்டுக் களைகளை வேருடன் தோண்டி, களைக்கொல்லியைக் கொண்டு எங்கள் முற்றத்தைப் பாதுகாத்தேன்.
அதேபோலவே பாவத்தின் இருப்பை நாம் புறக்கணிக்கும்போது அல்லது மறுக்கும்போது, அதின் அபாயகரமான வளர்ச்சியால் நமது வாழ்வில் படர்ந்து, நமது அந்தரங்கத்தை இருளாக்கிவிடும். பாவமில்லாத நமது தேவனிடம் எவ்வளவேனும் இருளில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாம், பாவங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம், அதனால் நாம் "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே" (1 யோவான் 1:7) நடக்கலாம். மனந்திரும்புதலின் மூலம், நாம் மன்னிப்பு மற்றும் பாவத்திலிருந்து விடுதலையை அனுபவிக்கிறோம் (வ. 8-10). நமக்காக இயேசுவென்னும் மிகச்சிறப்பாகப் பரிந்துபேசுகிறவர் உண்டு (2:1). அவர் நம் பாவங்களுக்கான இறுதி விலையை மனமுவந்து செலுத்தினார். ”நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற" (வச. 2) அவருடைய ஜீவரத்தமே அந்த கிரயம்.
நம்முடைய பாவம் தேவனால் சுட்டிக்காட்டப்படும்போது, நாம் மறுப்பு, தவிர்ப்பு அல்லது பொறுப்பிலிருந்து விலகுவதைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நாம் ஒப்புக்கொண்டு மனந்திரும்பும்போது, நாம் அவரோடும் பிறரோடும் கொண்டிருக்கும் உறவிற்குத் தீங்கு விளைவிக்கும் பாவங்களை அவர் களையெடுக்கிறார்.
நாம் தனியாக இல்லை
ஃபிரெட்ரிக் பிரவுன் என்பவரின் விறுவிறுப்பான சிறுகதையான "நாக்" இல், அவர் எழுதினார், "பூமியின் கடைசி மனிதன் ஒரு அறையில் தனியாக அமர்ந்திருந்தான். கதவு தட்டும் சத்தம் கேட்டது”. ஐயோ! அது யாராக இருக்கலாம், அவர்களுக்கு என்ன வேண்டும்? என்ன மர்மமான ஜந்து வந்தது? மனிதன் தனியாக இல்லையே.
நாமும் இல்லை. லவோதிக்கேயாவில் உள்ள சபையினர், கதவு தட்டப்படுவதைக் கேட்டனர் (வெளி.3:20). இயற்கைக்கு அப்பாற்பட்டவராக அவர்களிடம் வந்தது யார்? அவருடைய பெயர் இயேசு. முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிவர் (1:17). அவருடைய கண்கள் நெருப்பைப் போல ஜுவாலித்தது, “அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது" (வச.16). அவருடைய நெருங்கிய நண்பனான யோவான், அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தார் (வச.17). கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமானது தேவனுக்குப் பயப்படுவதிலிருந்து தொடங்குகிறது.
நாம் தனியாக இல்லை, இது ஆறுதல் அளிக்கிறது. இயேசு, அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய் (எபிரெயர் 1:3) இருக்கிறார். ஆனாலும் கிறிஸ்து தம்முடைய வலிமையை நம்மை அழிக்க அல்ல, நம்மை நேசிக்கவே பயன்படுத்துகிறார். அவருடைய அழைப்பைக் கேளுங்கள், "ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே பிரவேசித்து அவனுடன் போஜனம் பண்ணுவேன், அவனும் என்னுடன் போஜனம்பண்ணுவான்" (வெளி.3:20). வாசலில் நிற்பது யாரோ? என்கிற பயத்துடன் நமது விசுவாசம் துவங்கி, அது வரவேற்பிலும் ஆற தழுவுவதிலும் முடிகிறது. நாம் பூமியில் கடைசி நபராக இருந்தாலும், எப்பொழுதும் நம்முடன் இருப்பேன் என்று இயேசு உறுதியளிக்கிறார். தேவனுக்கு நன்றி, நாம் தனியாக இல்லை.
வசன பயிற்சி
1800 களின் பிற்பகுதியில், வெவ்வேறு இடங்களில் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான ஊழியத்திற்கான யுக்திகளை உருவாக்கினர். முதலாவது 1877 இல் கனடாவின் மாண்ட்ரீலில். பின்னர் 1898 இல், நியூயார்க் நகரில் மற்றொரு கருப்பொருளில் யுக்திகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1922 வாக்கில், வட அமெரிக்காவில் ஒவ்வொரு கோடைக்காலத்திலும் இதுபோன்ற சுமார் ஐயாயிரம் நிகழிச்சிகள் செயல்பாட்டில் இருந்தது.
இவ்வாறுதான் கோடை விடுமுறை வேதாகம பள்ளியின் ஆரம்பக்கால வரலாறு தொடங்கியது. வாலிபர்களும் வேதாகமத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தான் அந்த விபிஎஸ் முன்னோடிகளின் பேரார்வத்தைத் தூண்டியது.
.பவுல் தனது இளம் சீடரான தீமோத்தேயு மீது இதேபோன்ற ஆர்வத்தை கொண்டிருந்தார். "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" நாம் "எந்த நற்கிரியையுஞ் செய்ய.. பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" என்றெழுதினார் (2தீமோத்தேயு 3:16-17). இது ஏதோ, 'வேதத்தைப் படிப்பது உனக்கு நல்லது' என்பது போன்ற மேலோட்டமான ஆலோசனையல்ல. பவுல் "ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற" வ.7) கள்ள போதகர்கள் எழும்பும் “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று" (வச.1) கடுமையாய் எச்சரித்தார். வேதாகமத்தின் மூலம் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது (வ. 15).
வேதத்தை படிப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அது பெரியவர்களுக்கும்தான். அது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல; அது ஒவ்வொரு நாளுக்கும் ஏற்றது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார், "பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்று" (வச.15), இதனால் நாமும் சிறுவயது துவங்கியே வேதம் கற்கவேண்டும் என்றல்ல. வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், வேத ஞானம் நம்மை இயேசுவோடு இணைக்கிறது. இது நம் அனைவருக்குமான தேவனின் விபிஎஸ் பாடம்.
தேவன் முன் அமர்ந்திருத்தல்
உயிருள்ள ஒரு நபரின் முதல் புகைப்படம் 1838 இல் லூயிஸ் டாகுரே என்பவரால் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் ஒரு மதிய நேரத்தில் பாரீஸில் உள்ள ஒரு வெற்று நுழைவாயிலிருந்த ஒரு உருவத்தைச் சித்தரிக்கிறது. ஆனால் அதில் ஒரு தெளிவான மர்மம் இருக்கிறது; அந்த நேரத்தில் தெரு, நடைபாதை வண்டிகள் மற்றும் பாதசாரிகளின் போக்குவரத்தால் பரபரப்பாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அந்தப் படத்தில் அவ்வாறாக இல்லை
அந்த மனிதன் தனியாக இல்லை. புகைப்படம் எடுக்கப்பட்ட பிரபலமான பகுதியான "புலவர்ட் டு டெம்பிள்" இல் மக்கள் இருப்பார்கள். குதிரைகள் இருக்கும். அந்தப் படத்தில் அவ்வாறாகக் காட்டப்படவில்லை. புகைப்படத்தைச் செயலாக்குவதற்கான ஒளிப்படப்பிடிப்பு நேரம் (டாகுவேரியோ வகை ஒளிப்பட முறை என்பது பொதுப் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஒளிப்படப்பிடிப்பு முறை ஆகும்) ஒரு படத்தைப் பிடிக்க ஏழு நிமிடங்கள் எடுக்கும். அந்த நேரத்தில் அசைவில்லாமல் இருக்க வேண்டும். நடைபாதையில் இருந்த ஒரே நபர் புகைப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் மட்டுமே அசையாமல் நின்று கொண்டிருந்தார். அவர் தனது காலணிகளை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்..
சில நேரங்களில் நிலைத்திருத்தல் என்பது செயலாலும் மற்றும் முயற்சியாலும் செய்ய முடியாததைச் செய்து முடிக்கிறது. சங்கீதம் 46:10ல், தேவன் தம்முடைய மக்களிடம், "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" எனக் குறிப்பிடுகிறார். "ஜாதிகள் கொந்தளிக்கும்போது" (வச.6), "பூமி நிலைமாறினாலும்” (வச.2), அமைதியாக அவரை நம்புபவர்கள், "ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணை" யை அவரில் கண்டடைவார்கள் (வச. 1).
"அமைதியாக இரு" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வினைச்சொல் "முயற்சியை நிறுத்து" என்றும் குறிப்பிடுகிறது. நமது வரம்புக்குட்பட்ட முயற்சிகளில் நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும் நாம் தேவனில் இளைப்பாறும் போது, அவரே நம் அசைக்க முடியாத “அடைக்கலமும் பெலனும்" (வச. 1) என்று காண்கிறோம்.