நிலப்பரப்புகள் அடங்கிய அவரது எண்ணெய்த்தாள் ஓவியங்களில், பிரதிபலிப்பு ஒளியின் அழகைப் படம்பிடிக்க, அந்த கலைஞர் ஒரு முக்கிய கலை சூட்சுமத்தைப் பின்பற்றுகிறார்: “பிரதிபலிக்கப்பட்ட ஒளி அதன் மூல ஒளியைப் போல ஒருபோதும் வலுவாக இருக்காது.” ஆனால் அனுபவமற்ற  ஓவியர்கள் பிரதிபலிக்கப்பட்ட ஒளியை மிகைப்படுத்துவதாகக் கூறுகிறார். அவர் “பிரதிபலிக்கப்பட்ட ஒளி நிழலுக்குச் சொந்தமானது, எனவே ஓவியத்தின் ஒளிரும் பகுதிகளுடன் போட்டியிடாமல் அதற்கு இசைவாய் இருக்கவேண்டும்.” என்கிறார்.

“மனுஷருக்கு ஒளியாயிருந்தது” (யோவான் 1:4) என்று வேதம் இயேசுவைக் குறிப்பிடுவதில் இதேபோன்ற ஒர் உட்கருத்தை நாம் காண்கிறோம். யோவான் ஸ்நானன் “தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்” (வ. 7). சுவிசேஷ ஆக்கியோன் “அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.” (வ. 8) என்கிறார்.

யோவானை போலவே, விசுவாசமற்ற உலகத்தின் இருளில் வாழ்பவர்களுக்கு கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிக்க நாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டோம். ஒருவர் சொல்வதுபோல “ஒருவேளை அவிசுவாசிகள் அவருடைய ஒளியின் முழு மகிமையையும் நேரடியாகத் தாங்க கூடாமற்போகலாம்” என்பதால் இது நமது பொறுப்பு.

அந்த ஓவிய ஆசிரியர் தமது மாணவர்களுக்கு “ஒர் ஓவியத்தில் நேரடி ஒளி எதன்மீது விழுந்தாலும், அது ஒளியின் ஆதாரமாக மாறும்” என்று கற்பிக்கிறார். அதேபோல, இயேசுவே “எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.” (வச. 9), நாம் சாட்சிகளாகப் பிரகாசிக்க முடியும். நாம் அவரைப் பிரதிபலிக்கும்போது, ​​அவருடைய மகிமை நம் மூலம் பிரகாசிப்பதைக் கண்டு உலகம் வியக்கட்டும்.