ஒரு மாலை வேளையில், ஒரு கட்டுமான பகுதியருகில் நான் ஜாகிங் செய்து கொண்டிருந்தபோது, ​​ஒல்லியான, அழுக்கான பூனைக்குட்டி ஒன்று என்னையே ஏக்கத்தோடு பார்த்து, பின்தொடர்ந்து வீட்டிற்கு வந்தது. இன்று, மிக்கி ஒர் ஆரோக்கியமான, அழகான வளர்ந்த  பூனை. எங்கள் வீட்டில் வசதியான வாழ்க்கையை அனுபவித்து, என் குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்படுகிறது. நான் அதைக் கண்ட சாலையில் ஜாகிங் செய்யும்போதெல்லாம், “நன்றி தேவனே” என்று அடிக்கடி நினைப்பேன். மிக்கி தெருவிலிருந்து மீட்கப்பட்டது. அதற்கு இப்போது வீடு உள்ளது.

சங்கீதம் 91, தேவனை தங்கள் அடைக்கலமாக்கி “உன்னதமானவரின் மறைவில்” இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறது (வ.1) . இதிலுள்ள “தங்குவான்” என்பதின் எபிரேய பதத்திற்கு “நிலைத்திருத்தல், நிரந்தரமாகத் தங்குதல்” என்று அர்த்தம். நாம் அவரில் நிலைத்திருக்கும்போது, ​​அவருடைய ஞானத்தின்படி வாழவும், எல்லாவற்றிற்கும் மேலாக அவரை நேசிக்கவும் நமக்கு உதவுகிறார் (வ.14; யோவான் 15:10). நித்தியத்திற்கும் அவருடன் இருக்கப்போகும் ஆறுதலையும், பூமிக்குரிய கடினங்களிலும் நம்முடன் இருக்கும் அவரது  பாதுகாப்பையும் தேவன் நமக்கு வாக்களிக்கிறார். பிரச்சினைகள் வந்தாலும் அவருடைய சர்வ ஆளுகை, ஞானம், அன்பு நம்மைப் பாதுகாத்து விடுவிக்குமென்ற அவருடைய வாக்குத்தத்தங்களில் நாம் இளைப்பாறலாம்.

நாம் தேவனை அடைக்கலமாகக் கொள்கையில், ​​நாம் “சர்வ வல்லவரின் நிழலில்” வாழ்கிறோம் (சங்கீதம் 91:1). அவருடைய எல்லையற்ற ஞானமும் அன்பும் அனுமதிப்பதைத் தவிர எந்த பிரச்சினையும் நம்மைத் தொட முடியாது. இதுவே நமது கூடாரமாகிய தேவனின் பாதுகாப்பு.