சிங்கக்கெபியிலிருந்து
தாஹெரும் அவருடைய மனைவி டோன்யாவும் இயேசுவை ஏற்றுக்கொண்டதினிமித்தம் தங்கள் சொந்த தேசத்தில் பாடுகளை அனுபவிக்கவேண்டியதை அறிந்தே செயல்பட்டனர். அதின் விளைவாய் தாஹெர் கண்களும் கைகளும் கட்டப்பட்டவராய் சிறையிலடைக்கப்பட்ட விசுவாச துரோகம் இழைத்தவர்களாய் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் சித்திரவதை அனுபவிக்கப்போகும் முன்பு, அவரும் அவருடைய மனைவி டோன்யாவும் இயேசுவை மறுதலிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தனர்.
அவரை கொலைசெய்ய கொண்டுபோகும் இடத்தில் நடந்த சம்பவம் அவரை ஆச்சரியப்படுத்தியது. நீதிபதி அவரைப்பார்த்து, “எனக்கு ஏன் என்று தெரியவில்லை, ஆனால் மீனின் வாயிலிருந்தும் சிங்கத்தின் வாயிலிருந்தும் உன்னை விடுவிக்க விரும்புகிறேன்” என்று சொன்னார். நீதிபதி உதாரணமாய் பயன்படுத்திய வேதத்தின் இந்த இரண்டு சம்பவங்களை வைத்து (யோனா 2, தானியேல் 6) தேவன் தன்னை விடுவிக்க விரும்புகிறார் என்பதை தாஹெர் புரிந்துகொண்டார். தாஹெர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவனுடைய குடும்பம் வேறு தேசத்திற்கு நாடுகடத்தப்பட்டனர்.
தாஹெரின் இந்த ஆச்சரியமான மீட்பு தானியேலின் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. திறமையான நிர்வாகியாய் அவன் படிப்படியாய் முன்னேறுவதை அவனோடிருந்த மற்ற தலைவர்கள் விரும்பவில்லை (தானியேல் 6:3-5). ராஜாவைத் தவிர்த்து யாரையும் வணங்கக்கூடாது என்னும் சட்டத்தை பிறப்பிக்கச் செய்து, அவனை குற்றப்படுத்த எண்ணினர். தானியேல் இதை சற்றும் பொருட்படுத்தவில்லை. தரியு ராஜாவுக்கு அவனை சிங்கக்கெபியில் போடும்படிக்கு உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை (வச. 16). தாஹெரை ஆச்சரியவிதமாய் விடுவித்ததுபோல, தானியேலை தேவன் மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார் (வச. 27).
இயேசுவை பின்பற்றுவதினால் இன்று அநேக தேவ பிள்ளைகள் உபத்திரவத்தை சந்திக்கின்றனர். சிலர் கொலையும் செய்யப்படுகின்றனர். நாம் உபத்திரவத்தை சந்திக்கும்போது, நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட வழியை கர்த்தர் வைத்திருக்கிறார் என்று நம்முடைய விசுவாசத்தை பெலப்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் எந்த யுத்தத்தை சந்தித்தாலும் அவர் உங்களோடிருக்கிறார் என்பதை அறியுங்கள்.
மீட்டுக்கொள்ளும் தேவன்
என்னுடைய பிரசங்கத்தின் ஒரு பகுதியாக, மேடையில் ஓவியம் வரைந்துகொண்டிருந்த பெண் ஓவியரிடம் சென்று அவள் வரைந்துகொண்டிருந்த ஓவியத்தின் நடுவில் ஒரு கறுப்பு கோடு ஒன்றைப் போட்டேன். திருச்சபை விசுவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். ஓவியரின் அழகான அந்த படைப்பை நான் சிதைப்பதை அவள் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர், ஒரு புதிய தூரிகையைத் தேர்ந்தெடுத்து, பாழடைந்த அந்த ஓவியத்தை வேறொரு அழகிய கலைப் படைப்பாக ஆர்வத்துடன் மாற்றினாள்.
அவளுடைய அந்த படைப்பாற்றல், நம்முடைய வாழ்க்கை பாழாக்கப்படும்போது தேவன் செய்யும் கிரியையை எனக்கு நினைவுபடுத்தியது. ஏசாயா தீர்க்கதரிசி, இஸ்ரவேல் ஜனங்களின் ஆவிக்குரிய குருடாக்கப்பட்ட நிலைமையையும் செவிடாக்கப்பட்ட நிலைமையையும் கடிந்துகொள்கிறார் (ஏசாயா 42:18-19). அதன் பின்பு, தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை அறிவிக்கிறார்: “பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்” (43:1). அவர் நமக்கும் அதை செய்ய வல்லவர். நாம் பாவம் செய்த பின்பும், பாவத்தை அறிக்கையிட்டு அவரிடம் திரும்பும்போது அவர் நம்மை மன்னித்து நம்மை மீட்டுக்கொள்ள போதுமானவராயிருக்கிறார் (வச. 5-7; பார்க்க 1 யோவான் 1:9). அலங்கோலத்தை நம்மால் அழகாக்க முடியாது. ஆனால் இயேசுவால் அது கூடும். இயேசு நம்மை அவருடைய இரத்தத்தினால் மீட்டுக்கொண்டார் என்பதே சுவிசேஷத்தின் நற்செய்தி. முடிவிலே கிறிஸ்து நம் கண்ணீரைத் துடைத்து, நம்முடைய கடந்த காலத்திலிருந்து நம்மை மீட்டு, அனைத்தையும் புதிதாக்குவார் என்று வெளிப்படுத்தின விசேஷம் உறுதியளிக்கிறது (வெளிப்படுத்தல் 21:4-5).
வாழ்க்கையைக் குறித்த நம்முடைய அறிவு குறைவானது. ஆனால் நம்மை பேர்ச்சொல்லி அழைக்கிற தேவன் (ஏசாயா 43:1), நம்முடைய வாழ்க்கையை நாம் எதிர்பார்த்ததை விட நேர்த்தியாய் மாற்றுகிறவர். இயேசுவின் மீதான விசுவாசத்தினால் நீங்கள் மீட்கப்பட்டவர்களாயிருந்தால், அந்த ஓவியத்தைப் போன்று உங்களுடைய ஜீவியமும் நேர்த்தியான முடிவை பெற்றிருக்கும்.
சரியான இயேசு
குழுவினர் விவாதிக்கவேண்டிய நாவலைக் குறித்து புத்தக கழகத் தலைவர் சொன்ன மாத்திரத்தில், அறையின் அமைதி மறைந்து சலசலப்பு ஏற்படத் துவங்கியது. என் சிநேகிதி ஜோன் உன்னிப்பாக படித்தாள். ஆனால் அந்த நாவலின் முக்கிய திருப்பத்தை அடையாளம் காண அவளால் இயலாமல்போனது. கடைசியில் பார்த்தால், அவள் அதே தலைப்பு கொண்ட வேறொரு புத்தகத்தை வாசித்திருக்கிறாள் என்பது தெரியவந்தது. அவள் தவறான புத்தகத்தை ஆர்வத்தோடு படித்து மகிழ்ந்தாலும், சரியான புத்தகத்தை படித்த மற்ற குழுவினரோடு விவாதத்தில் இணைய அவளால் இயலாமல் போனது.
கொரிந்திய திருச்சபை விசுவாசிகள் “வேறொரு” இயேசுவை விசுவாசிப்பதை அப்போஸ்தலனாகிய பவுல் விரும்பவில்லை. கள்ளப் போதகர்கள் திருச்சபையில் ஊடுருவி தவறான இயேசுவை அவர்களுக்கு போதித்திருந்தால், அந்த பொய்யை நீங்கள் நம்பியிருப்பீர்கள் என்று அவர்களை பவுல் எச்சரிக்கிறார் (2 கொரிந்தியர் 11:3-4).
இந்த கள்ளப் போதகர்களின் போதனைகளை பவுல் கண்டித்தார். அவர் கொரிந்திய திருச்சபைக்கு எழுதிய முதல் நிருபத்தில், வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்துவைக் குறித்து அவர் விளக்கினார். இந்த இயேசுவே “நமது பாவக்களுக்காக மரித்து... மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து... பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்,” இறுதியில் பவுலுக்கும் தரிசமானார் (1 கொரிந்தியர் 15:3-8). இந்த இயேசு தன்னுடைய தெய்வீகத்தை நிரூபிக்கும்பொருட்டு கன்னி மரியாளின் மூலம் இப்பூமியில் அவதரித்து, இம்மானுவேல் (தேவன் நம்மோடு) என்று பெயரிடப்பட்டார் (மத்தேயு 1:20-23).
இது நீங்கள் அறிந்த இயேசுவைப்போல் இருக்கிறதல்லவா? அவரைக் குறித்து வேதத்தில் சொல்லப்பட்ட சத்தியங்கள் அனைத்தையும் புரிந்து ஏற்றுக்கொள்வது என்பது பரலோகத்திற்கு செல்லும் பாதையில் நாம் சரியாய் நடக்கிறோம் என்பதற்கான ஆதாரம்.
முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்கள்
எனது கணவர் எங்கள் மகனின் லிட்டில் லீக் பேஸ்பால் அணிக்கு பயிற்சியளித்தபோது, அந்த ஆண்டின் இறுதியில் பங்கேற்ற வீரர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் முன்னேற்றத்தை ஒத்துக்கொண்டார். அதில் டஸ்டின் என்னும் ஒரு இளம் விளையாட்டு வீரர் என்னிடத்தில் வந்து, “நாங்கள் இன்று விளையாட்டில் தோற்றோமல்லவா?” என்று கேட்டான்.
“ஆம், ஆகிலும் உங்களால் இயன்றதை நீங்கள் செய்தீர்கள் என்று நாங்கள் பெருமையடைகிறோம்” என்று சொன்னேன்.
“எனக்கு புரிகிறது, ஆனாலும் நாங்கள் தோற்றுவிட்டோமல்லவா?” என்று கேட்டான்.
நான் தலையசைத்தேன்.
“ஆனாலும் நான் ஏன் ஜெயித்ததுபோல உணர்கிறேன்?” என்று டஸ்டின் கேட்டான்.
“ஏனென்றால் நீ ஜெயிக்கிறவன்” என்று புன்முறுவலோடு அவனுக்கு பதிலளித்தேன்.
டஸ்டினைப் பொறுத்தவரையில் தன்னால் முடிந்தவரை போராடியும் தோல்வியடைந்துவிட்டால் அது தோல்வியே என்னும் மனப்பான்மையில் இருந்தான். கிறிஸ்தவர்களாகிய நம்முடைய யுத்தம் விளையாட்டு மைதானத்தில் நிறைவடையாது. இருப்பினும், வாழ்க்கையின் கடினமான கட்டத்தை நமது மதிப்பின் பிரதிபலிப்பாகப் பார்க்க அடிக்கடி தூண்டப்படுகிறோம்.
பவுல் அப்போஸ்தலர், தேவனுடைய பிள்ளைகளாகிய நம்முடைய தற்போதைய பாடுகளுக்கும் வரப்போகிற மகிமைக்கும் இருக்கும் தொடர்பை உறுதிசெய்கிறார். இயேசு தன்னையே நமக்காய் ஒப்புக்கொடுத்து, பாவத்துடனான நம்முடைய யுத்தத்தில் நமக்காய் யுத்தம் செய்து, அவரைப் போல மாறுவதற்கு தொடர்ந்து நம்மில் கிரியை செய்கிறார் (ரோமர் 8:31-32). நாம் உபத்திரவத்தையும் பாடுகளைகளையும் சந்திக்க நேரிட்டாலும், தேவனுடைய நிலையான அன்பு நம்மை உறுதியாய் நிற்க நமக்கு உதவிசெய்யும் (வச. 33-34).
அவருடைய பிள்ளைகளாய், பாடுகளை மேற்கொள்வதின் நிமித்தம் நம்முடைய சுயமதிப்பை விளங்கச்செய்யலாம். நம்முடைய வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாம் வழியில் தடுமாறலாம், ஆனால் நாம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் நம்மை அடையாளப்படுத்துவோம் (வச. 35-39).