நான் என்னுடைய நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, என்னுடைய இளைய மகள் கீழே இறங்கி வந்தாள். அவள் என் மடியில் அமர்ந்து குதித்து விளையாடினாள். ஒரு அப்பாவாக, நான் அவளை இறுக்கி, அவளுடைய முன்நெற்றியில் முத்தமிட்டு தகப்பனுடைய அன்பை வெளிப்படுத்தினேன். அவள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டாள். அவள் தன் புருவத்தை சுருக்கி, மூக்கை உறிஞ்சி நான் காபி குடிக்கும் கோப்பையை உற்று பார்த்துவிட்டு, “அப்பா, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் உங்களுடைய வாசனை எனக்கு பிடிக்கவில்லை” என்று சொன்னாள்.
என்னுடைய மகள் அந்த விமர்சனத்தை கிருபையோடும் சத்தியத்தோடும் முன்வைத்தாள். அவள் என்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் சிலவற்றை சொல்லுவதற்கு அவள் ஏவப்பட்டாள். நம்முடைய உறவுகளில் அதுபோன்ற சில காரியங்களை நாம் வெளிப்படையாய் சொல்லவேண்டியிருக்கிறது.
எபேசியர் 4ஆம் அதிகாரத்தில், ஒருவருடைய தப்பிதங்களை அவர்களிடம் நேரடியாய் சொல்வதற்கு தயங்குபவர்களுக்கு பவுல் சொல்லுகிறார்: “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்(குங்கள்)” (வச. 2). மனத்தாழ்மை, சாந்தம் மற்றும் நீடிய பொறுமை ஆகியவை நம் உறவின் அஸ்திபாரமாய் திகழ்கிறது. தேவனுடைய வழிநடத்துதலோடு இதுபோன்ற குணாதிசயங்களை பிரஸ்தாபப்படுத்தும்போது, “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” (வச. 15), “பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி” (வச. 29) பேசுவோம்.
யாரும் பலவீனங்களையும் குழப்பங்களையும் எதிர்கொள்ள விரும்புவதில்லை. நம்முடைய சுபாவங்களில் ஏதோ நாற்றம் வீசும்போது, கிருபையோடும் உண்மையோடும் தாழ்மையோடும் மென்மையாக பேசக்கூடிய உண்மையுள்ள நண்பர்களைக் கொண்டு தேவன் அதை நமக்கு தெரியப்படுத்துவார்.
உங்களை மென்மையாய் அணுகியது யார்? மற்றவர்களின் பலவீனங்களை அறிந்து, அவர்களை மென்மையாய் அணுகுவதற்கு மிகவும் முக்கியமானது எது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?
தகப்பனே, என்னுடைய தவறுகளை தாழ்மையுடன் ஒத்துக்கொள்ள எனக்கு உதவிசெய்யும். மற்றவர்களுடைய தவறை அன்போடும், கிருபையோடும், மென்மையோடும் அணுக எனக்கு உதவிசெய்யும்.