“அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று எனக்கு தெரியும், ஆனால் நான் உனக்கு சொல்லுகிறேன்” என்ற வாக்கியத்தை என்னுடைய அம்மா ஆயிரம் முறை சொல்லிவிட்டார்கள். தவறான நண்பர்களின் சகவாசத்தை அவ்வாறு சொல்வது வழக்கம். அந்த மந்தையை பின்பற்ற வேண்டாம் என்று அவர் எனக்கு போதிக்க முயற்சித்தார். நான் இன்னும் சிறுவனில்லை. ஆனால் மந்தையின் மனநிலை இன்னும் உயிருடன் இருக்கிறது. “உங்களை சுற்றிலும் நேர்மறையான நபர்களையே தேர்ந்தெடுங்கள்” என்பதே தற்போது பரவலாய் சொல்லப்படும் ஆலோசனை. ஆனால் அதைக் கேட்கும்போது, “இது கிறிஸ்துவின் வழியா” என்று எண்ணத் தோன்றுகிறது. 

“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்…” என்று மத்தேயு 5ஆம் அதிகாரத்தில் இயேசு பலமுறை சொல்லுகிறார். இந்த உலகம் நமக்கு தொடர்ந்து என்ன சொல்லிக்கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் நாம் வித்தியாசமானவர்களாய் வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால் “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்… உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (வச. 44). புதிய ஏற்பாட்டின் பிற்பகுதியில், பவுல் அப்போஸ்தலர் “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில்” (ரோமர் 5:10) தேவன் நம்மை நேசித்தார் என்று அதற்கான நியாயமான காரணத்தை முன்வைக்கிறார். “நான் செய்வதுபோல் செய்யாமல், நான் சொல்லுவதை செய்யுங்கள்” என்று சொல்லுகிறவர்களைப் போலல்லாமல், இயேசு செய்வதையே சொன்னார். அவர் நம்மை நேசித்து தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்தார். 

இயேசு கிறிஸ்து நல்லவர்களை மட்டும் தம்மிடம் அனுமதித்திருந்தால் என்னவாகியிருக்கும்? நாம் எங்கே இருந்திருப்போம்? தகுதி பார்த்து தெரிந்துகொள்ளாத அவருடைய அன்பிற்காய் தேவனுக்கு நன்றி. தேவன் உலகத்தின் மீது அன்புகூர்ந்தார். அதைப்போல நாமும் செய்ய அவர் நம்மை பெலப்படுத்துவார்.