1998 ஆம் ஆண்டு உலகிலேயே அதிகம் விற்பனையாகும் அலைபேசி உற்பத்தி நிறுவனமாக நோக்கியா உயர்ந்து, 1999 ஆம் ஆண்டு சுமார் நான்கு பில்லியன் டாலர்கள் லாபத்தை ஈட்டியது. ஆனால் 2011 ஆம் ஆண்டு அதின் விற்பனை தோய்ந்து, தோல்வியின் விளிம்பை நோக்கிப் போய்க்கொண்டிருந்த இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. நோக்கியா அலைபேசி பிரிவின் தோல்விக்கு முக்கிய காரணி, சந்தை நிலவரத்தைக் கண்டு பயந்ததால் எடுக்கப்பட்ட மோசமான தீர்மானங்கள். அதின் மேலாளர்கள் தங்கள் வேலை பறிபோகுமோவென்று, நோக்கியா அலைபேசியிலிருந்த மென்பொருள் மற்றும் வடிவமைப்பு குறைபாடுகளைக் குறித்துப் பேச தயங்கினர்.
யூத ராஜாவான ஆகாஸின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் பயத்தினால் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது (ஏசாயா 7:2). இஸ்ரவேலின் ராஜாவும், சீரியாவின் ராஜாவும் ஒரே அணியாகப் படைகளை ஒன்றுதிரட்டி, யூதாவின்மேல் யுத்தம் பண்ண வந்தார்கள் (வ.5–6). தேவன் ஏசாயாவைக்கொண்டு ஆகாஸின் எதிரிகளின் ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை (வ.7) என்று அவனை ஊக்கப்படுத்தினபோதும், மதியிழந்த தலைவன் பயத்தின் காரணமாக அசீரியா ராஜாவோடு கூட்டணி வைத்து, அந்த பராக்கிரமமான ராஜாவுக்குக் கீழ்ப்படுகிறான் (2 இராஜாக்கள் 16:7–8). நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் (ஏசாயா 7:9) என்று தனக்குச் சொன்ன தேவனை அவன் நம்பவில்லை.
இன்றைக்கும் விசுவாசத்தால் உறுதியாய் நிற்பதென்பதை புரிந்துகொள்ள, எபிரெய ஆக்கியோன், “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே”‘ (10:23) என்பதைக் கருத்தில் வைக்க நம்மை அறிவுறுத்துகிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற (வ.39) இயேசுவில் நம்பிக்கைவைக்க, பரிசுத்த ஆவியானவர் நம்மை பெலப்படுத்துவார்.
உங்கள் விசுவாசத்திற்கு அச்சுறுத்தலை எப்போது சந்தித்தீர்கள்? நிலைத்துநிற்கத் தேவன் உங்களுக்கு எவ்வாறு உதவினார்?
பிதாவே, எனக்குத் தேவையான விசுவாசத்தை நீர் அளிப்பதால் நான் உறுதியாய் நிற்க எனக்கு உதவும்.