ஒரு திரைப்படத்தில், ஏழை விவசாயி ஒருவர் தன்னுடைய மூன்று மகள்களுக்குத் திருமணம் முடிக்கச் சிரமப்படுகிறார். தேவனிடம், தனது பொருளாதாரத்தைக் குறித்து இப்படிச் சொல்கிறார்: “தேவனே நீர் அநேக ஏழைகளைப் படைத்துள்ளீர். ஏழையாய் இருப்பது அவமானமல்ல என்று புரிகிறது, ஆனால் அதில் பெருமையும் இல்லையே. எனவே எனக்குச் சிறிது ஆஸ்தி இருப்பதில் தவறென்ன, நான் ஐசுவரியவானாய் இருந்தால் உமது பிரம்மாண்டமான நித்திய திட்டம் நிறைவேறாதோ?”
ஷோலேம் அலெய்க்கேம் என்ற இத்திரைப்பட வசனகர்த்தா இந்த விவசாயி மூலம் இவ்வார்த்தைகளைப் பேசுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆகூர் இதேபோல யதார்த்தமான ,சற்று வித்தியாசமான ஜெபத்தைத் தேவனிடம் ஏறெடுப்பதை நீதிமொழிகள் புஸ்தகத்தில் பார்க்கலாம். ஆகூர் தேவனிடம் தனக்குச் செல்வத்தையும் வறுமையையும் தரவேண்டாமென்றும், மாறாகத் தனது படியை அளந்து போஷிக்குமாறும் கேட்கிறார் (நீதிமொழிகள் 30:8-9). அதிகமாக இருந்தால் பெருமையடைந்து தேவனை மறுதலிப்பவனாக மாறிவிடக்கூடும், தரித்திரனாக விட்டால் தான் பிறரிடம் திருடி தேவனின் நாமத்திற்கு அவமரியாதை உண்டாக்கக்கூடும் என்றும் அறிந்திருந்தார் (வ.9). தன்னை போஷிப்பவர் தேவனே என்பதை ஆகூர் புரிந்துகொண்டார். எனவே, தனது அனுதின தேவைகளுக்கு “படியை அளந்து” போடுமாறு கேட்கிறார். தேவனைப் பின்தொடர்வதையும், அவரால் மட்டுமே உண்டாகும் நிறைவையும் ஆகூரின் ஜெபம் வெளிக்காட்டுகிறது.
ஆகூரின் இந்த மனநிலை நமக்கும் இருப்பதாக, தேவன் ஒருவரே நம்மை போஷிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வோமாக. அவருடைய நாமம் மகிமைப்படும் விதத்தில் பொருளாதார உயர்வுகளை நாடுகிற நாம், அவருக்குமுன் மனநிறைவோடு வாழவும் பழகலாம். ஏனெனில் அவர் “அளந்து போடுகிறவர்” மட்டுமல்ல, அதற்கும் மேலாகவே அளிப்பவர்.
தேவனைப் பின்தொடரவும்,அவரில் மனநிறைவைக் கண்டுகொள்ளவும் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவருடைய நம்பிக்கைக்குரியர் என்பதால் உங்கள் நன்றியுணர்வை எவ்வாறு வெளிக்காட்டுவீர்கள்?
தேவனே, எங்களுக்குச் சகலத்தையும் தருபவரே, நீர் தரும் அனைத்திலும் மனநிறைவோடிருக்க எனக்கு உதவும்.