வில்லியம் கூப்பர் (1731–1800) எனும் ஆங்கில கவிஞரும், அவரது போதகரும் முன்னாள் அடிமை வியாபாரியுமான ஜான் நியூட்டனும் (1725–1807) நண்பர்களானார்கள். மன அழுத்தத்தாலும், கவலையாலும் பாதிக்கப்பட்ட கூப்பர், இருமுறை தற்கொலைக்கு முயன்றார். நியூட்டன் அவரை சந்திக்கும்போதெல்லாம், இருவரும் தேவனைப் பற்றிப் பேசிக்கொண்டே நீண்டதூரம் ஒன்றாய் நடப்பார்கள். கூப்பரின் கவிதை எழுதும் திறனைத் தட்டியெழுப்பும் வகையில், தனக்காகப் பாடல்களை எழுதும்படி ஊழியக்காரர் கேட்டுக்கொண்டார். கூப்பர் சம்மதித்து, “தேவன் அறிவுக்கெட்டாத வகையில் செயல்படுகிறார்” என்ற பிரபலமான பாடல் உட்பட அநேக பாடல்களை இயற்றினார். நியூட்டன் வேறு சபைக்கு மாறுதலாகிச் சென்றபோதிலும், அவரும் கூப்பரும் உற்ற நண்பர்களாய் கூப்பரின் மரணம் வரைக்கும் கடிதங்களில் உறவாடினார்கள்.
கூப்பர் மற்றும் நியூட்டன் ஆகிய இருவரின் நட்பை நான் பழைய ஏற்பாட்டின் தாவீது மற்றும் யோனத்தானுக்கு இடையேயான நட்போடு தொடர்புப்படுத்திப் பார்க்கிறேன். தாவீது கோலியாத்தை வென்றபின், “யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.” (1 சாமுவேல் 18:1). யோனத்தான் சவுல் ராஜாவின் குமாரனாய் இருந்தாலும், ராஜாவின் கோபத்திற்கும் பொறாமைக்கும் தாவீதை தற்காக்கிறான், தாவீது ஏன் கொல்லப்பட வேண்டுமென்று தன் தந்தையிடமே கேள்வி எழுப்புகிறான். அதற்கு மாறுத்தரமாகச் சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான் (20:33). ஆயுதத்திற்குத் தப்பிய யோனத்தானுக்கு தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது மனநோவாயிருந்தது. (வ.34).
இந்த இரண்டு ஜோடி நண்பர்களும், உயிருள்ளவரை இணைந்திருந்து, தேவனை நேசிக்கவும் ஊழியம் செய்யவும் ஒருவரை ஒருவர் உந்தித்தள்ளினர். இதுபோல நீங்களும் இன்று உங்கள் நண்பரை எவ்வாறு ஊக்குவிப்பீர்கள்?
நல்வாழ்க்கைக்கு நட்பு எத்தகைய பங்காற்றுகிறதென்று எண்ணுகிறீர்கள்? யாருக்காயினும் தேவனின் அன்பை வெளிப்படுத்தி, அவர்களை எவ்வாறு கட்டியெழுப்புவீர்கள்?
இயேசுவே, உமது நட்பையும் ஐக்கியத்தையும் ருசிக்க எனக்குதவும்.