அன்று மதிய உணவிற்குத் துரித உணவை மரியா எடுத்துக்கொண்டு காலியான இருக்கையில் அமர்ந்தாள். பர்கரை சுவைத்தவாறே சுற்றிலும் பார்த்த அவளின் பார்வை பல இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒரு வாலிபன் மீது பதிந்தது. அழுக்கான ஆடைகள், களைந்த தலைமுடி, காலியான காகித கோப்பையைக் கசக்கிக்கொண்டிருந்த கைகள். அவன் பசியோடிருக்கிறான். இவளால் எப்படி உதவக்கூடும்? பணம் கொடுப்பது நல்ல யோசனை அல்ல. உணவு வாங்கிக்கொடுத்தால், ஒருவேளை சங்கடப்படுவானோ?
அப்பொழுதுதான் ரூத்தின் சரித்திரத்தில், ஐசுவரியவானாகிய போவாஸ் வறுமையால் வாடும் அந்த புலம்பெயர்ந்த விதவை தன் வயலின் அறுவடையில் மிஞ்சியதைச் சேகரிக்க அவளை அன்பாய் ஏற்றுக்கொண்டதை மரியா நினைத்துப்பார்த்தாள். மேலும், “போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான் “(ரூத் 2:15–16). பெண்கள் தங்கள் ஜீவனத்திற்காக ஆண்களையே அதிகம் சார்ந்திருக்கும் அந்த கலாச்சாரத்தில், போவாஸ் தேவனின் அன்பான பராமரிப்பை வெளிப்படுத்தினார். இறுதியில் போவாஸ் ரூத்தை விவாகஞ்செய்து, அவளுடைய விதவை நிலையிலிருந்து அவளை மீட்டான் (4:9–10).
மரியா எழுந்து போகையில், அந்த வாலிபனின் கண்ணைப் பார்த்துக்கொண்டே, அருகிலிருந்த இருக்கையில் புதிய உணவுப்பொட்டலம் ஒன்றை வைத்துச் சென்றாள். அவன் பசியாயிருந்தால், இந்தத் துரித உணவை சேகரித்துக்கொள்ளலாம். இவ்வாறாக வேதாகமத்தில் உள்ள சம்பவங்கள் நூதனமான முறையில் நாம் செயல்படுவதற்கு நம்மை உற்சாகப்படுத்துகின்றன.
உங்கள் வாழ்வின் செழிப்பிலிருந்து சிறிது மற்றவர் பயன்பெற, நீங்கள் அழைக்கக்கூடிய நபர்கள் யாராகிலும் உண்டா? உங்களருகே இருப்பவர்களின் தேவைகளை வெளிப்படுத்தி தேவனுடைய மனம் போலவே அவர்களுக்கு உதவ தேவனிடம் கேளுங்கள்.
அன்பு தகப்பனே, இன்றைக்கு நான் உமது அன்பை வெளிப்படுத்துவதற்கேற்ற நபர்களை எனக்குக் காட்டும்.