பத்தாண்டுகளாகப் பிள்ளை இல்லாத நானும் எனது மனைவியும், 2011 ஆம் ஆண்டு புது நாட்டில் புதிய வாழ்வைத் துவங்கினோம். இந்த குடியேற்றம் உற்சாகமளித்தாலும், நான் அதிகம் நேசித்த ஒளிபரப்புப் பணியை விடவேண்டியிருந்தது. குழப்பமடைந்த நான், என் நண்பனிடம் யோசனை கேட்டேன்.”என் அழைப்பு என்னவென்றே எனக்குத் தெரியவில்லை” என்று அவனிடம் மனச்சோர்வோடு பேசினேன்.

“நீ இங்கே ஒளிபரப்பு செய்யமாட்டாயா?” என்று கேட்ட அவனிடம். இல்லையென்றேன். “உன் திருமண வாழ்க்கை எப்படியுள்ளது” என்று அவன் கேட்க, எங்கள் பேச்சு சற்று திசைமாறினாலும்; நானும் என் மனைவியும் நன்றாக இருப்பதாகவே அவனிடம் கூறினேன். நாங்கள் இருவருமே மனமுடைந்து இருந்தோம், ஆனால் இந்த சோதனை எங்களை இன்னும் நெருக்கமாக்கியிருந்தது.

“சுவிசேஷத்தின் அஸ்திபாரமே அர்ப்பணிப்புதான்” என்று, அவன் புன்னகைத்தான். “உன்னுடைய இந்த அர்ப்பணிப்பான திருமண வாழ்க்கை இந்த உலகிற்கு எவ்வளவாய் தேவை! நீ செய்வதைக் காட்டிலும், நீ வாழும் விதமே இந்த உலகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லை.” என்றான்.

கடினமான பணிச்சூழல் தீமோத்தேயுவை மனஞ்சோர செய்கையில், அப்போஸ்தலன் பவுல் அவனுக்கு எந்த இலக்கையும் தரவில்லை. மாறாக தீமோத்தேயுவை பக்தியுள்ள ஒரு வாழ்வு வாழவும், அவனுடைய பேச்சு, நடக்கை, அன்பு, விசுவாசம் மற்றும் கற்பின் மூலம் ஒரு முன்மாதிரியைக் காட்டவும் உற்சாகப்படுத்துகிறார் (4:12–13,15). அவருடைய விசுவாச வாழ்வினால் பிறர்வாழ்விலும் தாக்கம் ஏற்படுத்தலாம்.

நம்முடைய பணிகளின் வெற்றியைக் கொண்டு நமது வாழ்வை மதிப்பீடு செய்வது சுலபம், ஆனால், நமது குணாதிசயமே முக்கியம். நான் அதைத்தான் மறந்துபோனேன். உண்மையான வார்த்தை, கருணையான செயல், அர்ப்பணிப்பான திருமண வாழ்க்கையும்கூட பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். ஏனெனில் இவைகள் மூலம் தேவனுக்கே உரித்தான நன்மைகள் இவ்வுலகை அசைக்கின்றன.