மருத்துவ ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்த ஒரு வாரத்திற்குப் பின் சோர்ந்துபோய் நான் சோபாவில் அமர்ந்தேன். எதைக்குறித்தும் சிந்திக்கப் பிடிக்கவில்லை, யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை, ஜெபிக்கவும் முடியவில்லை. சந்தேகமும், ஊக்கமின்மையும் என்னை அமிழ்த்த, தொலைக்காட்சியைப் பார்த்தேன். அதில் வந்த விளம்பரம் ஒன்றில், ஒரு சிறுமி தன் தம்பியிடம், “நீ சிறந்த வீரன்” என்றாள். அவ்வாறே அவனை அவள் தொடர்ந்து ஊக்கமளிக்கையில், அச்சிறுவன் சிரித்தான். நானும் சிரித்தேன் .
தேவஜனங்கள் எப்போதுமே மனமடிவினாலும், சந்தேகத்தாலும் பாதிக்கப்பட்டனர். தேவனுடைய சத்தம் பரிசுத்த ஆவியானவரால் மனிதருக்குக் கேட்கும் என்பதை உறுதிப்படுத்தும் சங்கீதம் 95 ஐ மேற்கோள்காட்டி, எபிரெய நிருபத்தின் ஆக்கியோன் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தர பயணத்தில் செய்த தவறுகளை விசுவாசிகள் தவிர்க்கும்படி எச்சரிக்கிறார் (எபிரெயர் 3:7–11). “சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.” என்றும் “நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் (ஊக்கமளியுங்கள்)” என்றும் எழுதினார் (வ.12–13).
நம்முடைய நம்பிக்கை கிறிஸ்துவில் இருக்க, நமக்குத் தேவையான உதவி. நாம் நீடிய பொறுமையோடு இருப்பதற்குத் தேவையான பெலனை விசுவாசிகளின் ஐக்கியம் மூலம் பெற்றுக் கொள்கிறோம் (வ.13). ஒருவர் சந்தேகிக்கையில், மற்றொருவர் அவரை உறுதிப்படுத்தி உத்தரவாதம் செய்யலாம். இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்த, தேவஜனமாகிய நமக்குத் தேவனே பெலனளிக்கிறார்.
உங்கள் வாழ்வின் கடினமான நேரத்தில் தேவன் எவ்வாறு ஒருவருடைய வார்த்தைகளால் உங்களை ஆறுதல்படுத்தி ஊக்குவித்தார்? இன்றைக்கு மற்றவர்களை நீங்கள் எவ்வாறு ஊக்குவிப்பீர்கள்?
அன்பான தேவனே, உமக்காய் வாழவும், எனது வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் பிறரையும் ஊக்குவிக்கவும் எனக்கு உதவும்.