நான் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்ற நாட்களில், அமெரிக்காவின் நன்றிசெலுத்தும் விடுமுறை நாளானது வேறொரு வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த வாரத்தின் இறுதியில் நான் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்தினாலும், அந்த குறிப்பிட்ட நாளில் என்னுடைய குடும்பத்தினருடனும் சிநேகிதர்களுடனும் இருக்கமுடியவில்லையே என ஏங்கினேன். ஆனாலும் என் ஏக்கங்கள் எனக்கு மட்டும் உரியது இல்லை என்பதை புரிந்துகொண்டேன். விசேஷமான தருணங்களிலும் விடுமுறை நாட்களிலும் நமக்குப் பிரியமானவர்களுடன் இருக்க நாம் அனைவரும் ஏங்குகிறோம். நாம் கொண்டாடும் போது கூட, நம்முடன் இல்லாத ஒருவரை நாம் இழக்க நேரிடலாம் அல்லது நமது உடைந்த குடும்பம் நிம்மதியாக இருக்க ஜெபிக்கலாம். 

இதுபோன்ற சமயங்களில், வேதத்தின் ஞானத்தைப் பற்றி ஜெபிப்பதும் சிந்திப்பதும் எனக்கு உதவியது. அதில் சாலொமோனின் நீதிமொழியும் உள்ளடங்கும்: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்” (நீதிமொழிகள் 13:12). இந்த வார்த்தையில், சாலொமோன் “தாமதிக்கிற நம்பிக்கை” ஏற்படுத்தக்கூடிய விளைவை குறிப்பிடுகிறார். அதிக ஏக்கமான ஒன்றை தாமதப்படுத்துவது, கவலை மற்றும் வேதனையை விளைவிக்கும். ஆனால் அது கிடைக்கும்போது, அது ஜீவ விருட்சம் போலிருக்கும் என்று குறிப்பிடுகிறார். அது நம்மை புத்துணர்ச்சியுடனும், துடிப்புடனும் உணர அனுமதிக்கிறது.

நம்முடைய சில நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் உடனடியாக நிறைவேறாமல் போகலாம். சிலவற்றை நம்முடைய மரணத்திற்கு பின்பும் தேவன் நிறைவேற்றலாம். நம்முடைய ஏக்கம் எதுவாக இருந்தாலும், அவர் நம்மை இடைவிடாமல் நேசிக்கிறார் என்பதை அறிந்து, நாம் அவரை விசுவாசிக்கலாம். அத்துடன் ஒருநாள் நம்முடைய அன்புக்குகந்தவர்களோடு அவருடைய பரம விருந்தில் பங்கேற்போம் (வெளி. 19:6-9, பார்க்க).