ஓர் அறிமுகமில்லாத இடத்திற்கு என்னை அழைத்துச் சென்ற என்னுடைய கணவர், (தடங்காட்டி) ஜீ.பி.எஸ் தவறாய் வழிகாட்டிவிட்டது என்றார். நான்குவழிச் சாலையை அடைந்த நாங்கள், அதனோடு இணைந்து வரும் ஒரு வழிப்பாதையை தேர்ந்தெடுக்கும்படி வழிநடத்தப்பட்டோம். தாமதம் செய்யாமல், “இது சரியாயிருக்கும்” என்று டேன் கூறினார். பத்து மைல்கள் தூரம் கடந்த பின்பு, எங்களுக்கு அருகில் பாதையில் கடந்து சென்ற வாகனங்கள் வாகன நெரிசலுக்கு உட்பட்டுத் தேங்கி நின்றது. ஏதாகினும் பிரச்சினையா? பெரிய கட்டுமானப்பணி நடைபெறுகிறது என்று தடங்காட்டி சொன்னது. அங்கிருந்த துணை பாதை வழியாய் சென்றால் எளிதாய் போய்விடலாம் என்று தடங்காட்டி எங்களுக்கு வழிகாட்டியது. “தொலைவில் என்ன இருக்கிறது என்பதை என்னால் பார்க்கமுடியாது; ஆனால் தடங்காட்டி அதைப் பார்க்கமுடியும்” என்று டேன் சொன்னார். தேவனை நம்புவதும் அப்படித்தான் என்பதை நாங்கள் ஒத்துக்கொண்டோம்.
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிற (மத்தேயு 2:2) இயேசுவைப் பணிந்துகொள்ளும்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளின் முன்பாக இருந்ததை முன்னறிந்து அவர்களின் கனவிலே தேவன் அவர்கள் பாதையை மாற்றினார். தனக்குப் போட்டியாகப் பிறந்த ராஜாவின் பிறப்பால் கலங்கிய ஏரோது ஞானிகளிடம், “நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்” (வ.8). பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.(வ.12)
தேவன் நம்மையும் வழிநடத்துகிறவர். வாழ்க்கையின் நெடுஞ்சாலைகளில் நாம் கடந்துசெல்லும்போது, எதிர்கொண்டு வருகிற அனைத்தையும் அவர் பார்க்கிறார் என்ற உறுதியுடன் “அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார்” என்று நம்பி அவருடைய வழிகளுக்குப் பூரணமாய் ஒப்புக்கொடுப்போம்.
உங்கள் வாழ்க்கைப் பாதையைத் தேவன் திசைமாற்றிய அனுபவத்தை நினைவுபடுத்திப் பாருங்கள்? அதில் அவரை நம்பியதால் ஏற்பட்ட விளைவு என்ன?
தேவனே, சாலையின் தொலைவில் என்ன இருக்கிறது என்பதை என்னால் பார்க்க இயலவில்லை. ஆனால் அது உம்மால் கூடும். என்னுடைய பாதையில் நீர் மாற்றத்தைக் கொண்டுவரும்போது அதைக் கிரகிக்கும் ஞானத்தை எனக்கு அருளும்.