கண்ணாடியில் தெரிவது யார்? என்னும் கேள்வியை சுய அங்கீகாரத்தைப் பரிசோதிக்கும் உளவியலாளர்கள் சிறுபிள்ளைகளிடம் கேட்கின்றனர். பதினெட்டு மாதங்களும் அதற்குக் குறைவான வயதுடைய சிறுபிள்ளைகளால் கண்ணாடியில் தெரியும் உருவம் தங்களுடையதுதான் என்பதை அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் பிள்ளைகள் வளரும்போது அது தங்களுடைய உருவம்தான் என்பதை அறிந்துகொள்கின்றனர். சுய அடையாளம் காண்பது என்பது ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்குமான முக்கிய அறிகுறி.
விசுவாசிகள் இயேசுவில் வளருவதும் முக்கியமானது. கண்ணாடியில் தங்களை அடையாளம் காணும் சோதனையை யாக்கோபும் பயன்படுத்துகிறார். “சத்திய வசனமே” யாக்கோபின் கண்ணாடி (யாக். 1:18). நாம் வேதத்தை வாசிக்கும்போது என்ன பார்க்கிறோம்? வேதம் அன்பையும் தாழ்மையையும் போதிக்கும்போது, அதில் நாம் நம்மைப் பார்க்கமுடிகிறதா? தேவன் கொடுத்த கட்டளையின் பிரகாரம் நம்முடைய செய்கைகள் இருக்கிறதா? நம்முடைய இருதயத்தையும் செய்கைகளையும் நிதானிக்கும்போது, அது தேவனுடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா அல்லது நாம் மனந்திரும்பி, மாற்றத்திற்கேதுவான வாழ்க்கை வாழ வேண்டுமா என்பதை அடையாளம் காண்பதற்கு வேதம் நமக்கு உதவுகிறது.
வேதத்தை நிர்விசாரமாய் வாசித்து, அதன்படி செய்யாமல் இருப்போமாகில், நம்மை நாமே வஞ்சிக்கிறோம் என்று யாக்கோபு சொல்லுகிறார் (வச.22). வேதாகமம் தேவனுடைய சித்தத்தின்படி ஞானமாய் வாழுவதற்கான திட்டத்தை நமக்குக் கொடுக்கிறது. அதை நாம் வாசிக்கும்போதும், தியானிக்கும்போதும், அதை உட்கொள்ளும்போதும், நம்முடைய இருதயத்தைப் பார்க்கும் சிலாக்கியத்தை அருளும்படிக்கு தேவனிடத்தில் விண்ணப்பித்து, தேவையான மாற்றங்களை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்த முடியும்.