Archives: செப்டம்பர் 2022

அவர் நாமத்தை நம்புங்கள்

நான் சிறுவயதாக இருக்கும் போது பள்ளிக்கு செல்வதென்றாலே எனக்கு ஒரு பயம். ஏனெனில் சில மாணவிகள் என் மனம் நோகும்படியாக என்னைக் கேலி செய்வர். ஆகவே இடைவேளையின்போது நூலகத்தில் ஒளிந்துகொண்டு, அங்கேயிருந்த கிறிஸ்தவ கதைபுத்தகங்களை வாசிக்கத் துவங்கினேன். "இயேசு" என்ற பெயரை முதன்முதலாக வாசித்ததும், இது என்னை நேசிக்கும் ஒருவரின் பெயரென்று அறிந்துகொண்டேன். அடுத்து வந்த மாதங்களில், நான் பள்ளிக்குள் நுழையும்போதெல்லாம் எனக்கு முன்னிருந்த பயமுறுத்தும் காரியங்களை எண்ணி, "இயேசுவே, என்னைக் காத்தருளும்" என்று ஜெபிப்பேன். அவர் என்னைப் பார்க்கிறார் என்றறிந்து, தைரியமாகவும், அமைதியாகவும் இருந்தேன். இடைப்பட்ட நேரத்தில், அந்த மாணவிகளும் என்னைக் கிண்டல் செய்வதை நிறுத்திவிட்டனர். ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவனை நம்புவதென்பது என் வாழ்வில் தொடர்ந்து கொண்டேயிருந்தது. தேவன் உண்மையுள்ளவர் என்றெண்ணி, அவருடைய நாமத்தை நம்பி, அவரையே சார்ந்து கொண்டேன். தேவனுடைய நாமத்தை நம்புவதிலுள்ள பாதுகாப்பை தாவீதும் அறிந்திருந்தார். அவர் சங்கீதம் 9 ஐ இயற்றுகையில், தேவனே நீதியாய் நியாயம் செய்யும் சர்வவல்ல நியாயாதிபதி (வ.7–8, 10, 16) என்பதை அனுபவித்திருந்தார். எனவே தன்னுடைய பகைவர்களுக்கு எதிராக யுத்தஞ்செய்கையில், தன்னுடைய ஆயுதங்களையோ, இராணுவ சாமர்த்தியத்தையோ நம்பாமல், "நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்" (வ. 9) என்று தேவனை நம்பி, அதையே வெளிக்காட்டினார்.

அவருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு அவரைக் கூப்பிடுகையில், எவ்வாறெல்லாம் அவர் உதவிசெய்வார் என்பதை, ஒரு சிறுமியாக நான் அனுபவித்துள்ளேன். நம் அனைவரையும் நேசிக்கும் நாமமான "இயேசு" என்ற நாமத்தை எப்பொழுதும் நாம் நம்புவோமாக.

கசப்பிற்குப் பதிலாக கருணை

செப்டம்பர் 11, 2001, அன்று உலக வணிக மையம் தகர்க்கப்பட்டபோது, அதின் இடர்பாடுகளில் சிக்கி மரித்தவர்களில், கிரெக் ரோட்ரிக்சும் ஒருவர். அவர் தாயார் பிலிசும், அவர் அப்பாவும், தங்கள் மகனுக்காக வேதனைப்பட்டிருந்தாலும், அந்தக் கொடூரமான தாக்குதலுக்கு தங்கள் பதிலை கவனமாகத் தெரிந்தெடுத்தனர். தீவிரவாதிகளுக்கு உதவியவர்களில் ஒருவரின் தாயான, ஐக்கா எல் வபெவை பிலிஸ் சந்தித்தார். பிலிஸ் "நான் அவரை அணுகி, என் கரங்களை விரித்தேன். நாங்கள் தழுவியவாறே அழுதோம். எங்கள் இருவருக்கும் உடனடியாக ஒரு பிணைப்பு உண்டானது. எங்கள் மகன்களுக்காக நாங்கள் இருவருமே வருந்தினோம்" என்றார்.

இரு தாய்மார்களும் சந்தித்ததில் வலியும், வேதனையும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. தன் மகனுடைய மரணத்திற்காக ஆத்திரம் கொள்வது சரியென்றாலும் கூட, அவருடைய வேதனையை அது ஆற்றாது என கிரெக் ரோட்ரிக்சின் தாயார் புரிந்திருந்தார். மற்ற தாயாரின் குடும்பப் பின்னணியத்தை அறிந்தபோது, இவருக்குக் கருணைதான் உண்டானது. எனவே விரோதியாகப் பார்க்கும் எண்ணத்தை எளிதாக மேற்கொண்டார். இவருக்கு நீதி வேண்டும்தான், ஆனால் நமக்குத் தவறிழைக்கப்படும்போது பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்தை விடவேண்டும் என்பதை அந்தத் தாயார் உறுதியாய் நம்பினார்.

அப்போஸ்தலன் பவுலும் இந்த உறுதிப்பாட்டைப் பகிர்ந்துகொண்டு, "சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது." (எபேசியர் 4:31) என்று நம்மை அறிவுறுத்துகிறார். நம்மை அழிக்கக்கூடிய இத்தகைய குணங்களை நாம் விடுகையில், தேவ ஆவியானவர் நமக்கு புதிய கண்ணோட்டத்தைத் தருவார். ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருங்கள் (வ.32) என்று பவுல் கூறுகிறார். பழிவாங்குவதைத் தவிர்க்கும் அதேநேரம் அந்தத் தவற்றைச் சரிசெய்யவும் நாம் முயலலாம். கசப்பை மேற்கொள்ளும் மனதுருக்கத்தை வெளிக்காட்ட ஆவியானவர் நமக்கு உதவுவாராக.

வழக்கத்திற்கு மாறான சகாப்தம்

ரோம பேரரசர் கான்ஸ்டான்டின் (கி.பி.272–337), தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை, தேவனை அறியாதவராகவே செலவிட்டிருந்தாலும், கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்தும் வழக்கத்தை மாற்றி, மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேலும், இன்றும் நாம் உபயோகிக்கும் கால அட்டவணையை கி.மு (கிறிஸ்துவுக்கு முன்) கி.பி (கிறிஸ்துவுக்கு பின்) என்று சரித்திரத்தையே இரண்டாய் பகுத்துக் கொடுத்தார்.

இந்த முறையை உலகப்பிரகாரமான வழக்கமாக மாற்றும் ஏற்பாடாகக் கால அட்டவணையை பொது சகாப்தம் (CE), பொது சகாப்தத்திற்கு முன் (BCE) என மாற்றிவிட்டனர். தேவனை எவ்வாறெல்லாம் உலகம் தவிர்க்கிறது என்பதற்கு உதாரணமாகச் சிலர் இதைக் குறிப்பிடுவர்.

ஆனால் தேவனைத் தவிர்க்கவே முடியாது. எவ்வாறாகப் பெயரை மாற்றினாலும் காலத்தின் நடுமையத்தை நிர்ணயிப்பது, இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களே. வேதத்தில், எஸ்தர் புத்தகத்தில் தேவன் என்ற சொல்லேயில்லாமல் இருப்பது சற்று முரண்பாடாய் தோன்றலாம். ஆனால் அதிலுள்ள சரித்திரமே தேவன் அளித்த விடுதலையைப் பற்றியதுதான். சொந்த தேசத்தை விட்டுத் துரத்தப்பட்டவர்களாக, அந்நிய தேசத்தில் யூதர்கள் வாழ்ந்தார்கள். அந்த அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அதிகாரி அவர்களைக் கொல்லப் பார்த்தான் (எஸ்தர் 3:8–9, 12–14). ஆயினும் எஸ்தர் ராஜாத்தி மூலமாகவும், அவளுடைய சித்தப்பாவான மொர்தெகாய் மூலமாகவும் தேவன் தமது ஜனத்தை விடுவித்தார். இதின் நினைவாக பூரிம் எனும் யூத பண்டிகையையும் இந்நாள் வரைக்கும் கொண்டாடுகின்றனர் (9:20–32).

இப்போது உலகம் இயேசுவை எவ்வாறாக மதிப்பிட்டாலும் சரி, அவர் அனைத்தையும் மாற்றிவிட்டார். இப்போது அவர் நம்மை ஒரு வழக்கத்திற்கு மாறான ஒரு சகாப்தத்திற்கு அழைக்கிறார், அங்கே உண்மையான நம்பிக்கையும் வாக்குறுதியும் உண்டு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை நம்மைச் சுற்றிலும் பார்ப்பதுதான், அப்போது நாம் அவரை காண்போம்.

பரலோகில் மீண்டும் இணைதல்

எனது தாயாரின் அஞ்சலி செய்தியை எழுதுகையில், "மரித்தார்" என்ற வார்த்தை ஏதோ இறுதியானதாய் எனக்குத் தோன்றவே அதனை மாற்றி "இயேசுவின் கரங்களுக்குள் அழைக்கப்பட்டார்” என்றெழுதினேன். என் தாயாரில்லாத குடும்ப புகைப்படங்கள் சிலவற்றைப் பார்த்து சிலநேரம் வருந்தினேன். சமீபத்தில், மரித்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களைத் தத்ரூபமாய் வரையும் ஒரு ஓவியரைக் கண்டேன். புகைப்படங்களின் உதவியால் குடும்ப படத்தில் மரித்த நபர்களை இணைப்பதில் அவர் வல்லவர். எனதருகே என் தாயார் இருந்த அவ்வோவியத்தை கண்ணீர் மல்க ரசித்தேன். அவருடைய அந்தக் கலை, தேவன் வாக்களித்த பரலோக இணைப்பை எனக்கு நினைவூட்டியது. 

இயேசுவின் விசுவாசிகள் "மற்றவர்களைப்போலத் துக்கிக்க" தேவையில்லை என்று உறுதியளிக்கிறார் (1 தெசலோனிக்கேயர் 4:13). "இயேசுவானவர் மரித்த பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்."(வ.14). பவுல், இயேசுவின் இரண்டாம் வருகையையும், இயேசுவோடு விசுவாசிகள் ஒன்று சேர்க்கப்பட்டு இணைவதையும் அறிவிக்கிறார் (வ.17).

இயேசுவை நம்பி மறித்த நம் அன்பானவர்கள் மரிக்கையில், பரலோகில் ஒன்றினைவோமென்பது தேவனின் வாக்குத்தத்தமாகும். நாம் மரிக்குமட்டுமோ அல்லது இயேசு வருமட்டுமோ, உயிர்த்த நமது ராஜாவுடன் வாழப்போகும் வாக்கு பண்ணப்பட்ட எதிர்காலத்தைக் குறித்த உறுதியான நிச்சயத்தோடு, நமது மரணத்தையும் எதிர்கொள்வோம்.