அந்தப் பள்ளியில் அஷோக்கின் விளையாட்டு திறமையையும், எளிதில் உணர்ச்சி வசப்படாத அமைதியையும் பாராட்டாதவரே இல்லை. விளையாட்டு மைதானத்தில் அவனுக்கு அலாதி சந்தோஷம்.
தன் வீட்டினருகே இருந்த ஒரு சபைக்குச் சென்றதால் அவன் இயேசுவைப் பின்பற்ற முடிவுசெய்தான். அதுவரைக்கும், அவன் அநேக குடும்ப நெருக்கடிகளைச் சந்தித்தான், அதற்கு ஆறுதலாகப் போதைப் பொருட்களையும் பழகிக்கொண்டான். அவனுடைய மனமாற்றத்திற்குப்பின் சிலகாலம் எல்லாமே நன்றாகத்தான் இருந்தது, ஆனால் சிலவருடங்கள் கழிந்து மீண்டும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் துவங்கினான். முறையான ஆலோசனையும், சிகிச்சையும் இல்லாத காரணத்தால், போதைப் பழக்கம் எல்லை தாண்டவே அவன் மரித்தான்.
நெருக்கடியின்போது நாம் பழைய பாவத்திற்குத் திரும்புவது சுலபம். இஸ்ரவேலர்கள் தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த அசீரியர்களின் தாக்குதலுக்குத் தப்பிக்க, உதவிக்காக தங்கள் பழைய எஜமானர்களான எகிப்தியர்களிடம் திரும்பினர் (ஏசாயா 30:1–5). இது அழிவுக்கேதுவானது என்று தேவன் முன்னறிவித்திருந்தாலும், இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமையின் மத்தியிலும், அவர்களுக்காகத் தொடர்ந்து அக்கறை கொள்கிறார். தேவனின் இதயத்தை ஏசாயா, “உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்” (வ.18). என்று வெளிப்படுத்தினார்.
நமது வேதனைக்கு வேறெங்கிலும் ஆறுதலைத் தேட நாம் முயலுகையில், தேவன் இப்படியே நம்மையும் அணுகுகிறார். நமக்கு உதவ விரும்புகிறார். நம்மை அடிமைப்படுத்தும் பழக்கங்களால் நம்மை நாமே காயப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. சில பொருட்களும், பழக்கங்களும் நமக்கு உடனடி தீர்வை தருமென்று நாம் ஈர்க்கப்படலாம். ஆனால் தம்மோடு நெருக்கமாக நடக்கையில் உண்டாகும், அதிகாரப்பூர்வமான நிரந்தர தீர்வை நமக்குத் தரவே, தேவன் விரும்புகிறார்.
நாம் தோல்வியுறும் வேளைகளில் தேவனின் கிருபையைச் சார்ந்துகொள்வது ஏன் அவசியம்? தேவனுடனான உங்கள் உறவில் அவருடைய நம்பகத்தன்மையை நீங்கள் எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்?
அன்பு தேவனே, என்னுடைய பாவமான வழிமுறைகளிலிருந்து என்னை விடுவியும். வேறெதிலாகிலும் உடனடி விடுதலை பெற நான் தூண்டப்படுகையில், உம்மிடமே நான் தஞ்சம் புக எனக்குதவும்.