வலைப்பதிவு எழுத்தாளர் கெவின் லின்னின் வாழ்வில் பெரும் வீழ்ச்சி உண்டானது. சமீபத்திய கட்டுரையொன்றில் “நான் என் தலையில் துப்பாக்கி ஒன்றை வைத்து அழுத்தப்போனேன், ஆனால் இயற்கைக்கப்பாற்பட்ட விதமாக தேவன் அந்த அறைக்குள் வந்தார். என் வாழ்விலும் வந்தார். அந்த நொடியில் தேவன் என்றால் யாரென்று அறிந்துகொண்டேன்” என்றெழுதினார். லின் தற்கொலை செய்வதைத் தேவன் தடுத்தார். தேவன் உண்டென்ற நம்பிக்கையை அவருக்குள் ஆழமாய் வேரூன்றச் செய்து, தம் அன்பின் பிரசன்னத்தை அவருக்கு நினைப்பூட்டினார். இந்த வியத்தகு சந்திப்பை தமக்குள் மறைத்துவைப்பதற்குப் பதிலாக தம் அனுபவத்தை உலகத்தோடு லின் பகிர்ந்துகொண்டார். யூட்யூப் சேனல் மூலம் ஊழியம் ஓன்றைத் துவங்கி, தம் மனமாற்ற அனுபவத்தையும், அதுபோன்ற மற்றவர்களின் அனுபவத்தையும் உலகத்தோடு பகிர்ந்துகொள்கிறார்.
இயேசுவின் நண்பனும் சீஷனுமான லாசரு மரித்தபோது, அநேகர் இயேசு தாமதமாக வந்ததாக எண்ணினர் (யோவான் 11:32). கிறிஸ்து வருமுன் லாசரு நான்கு நாட்களாகக் கல்லறையில் வைக்கப்பட்டிருந்தான். ஆனால் அவர் அவனை உயிரோடெழுப்பி, அந்தத் துயரமான நேரத்தை ஒரு அற்புதமான நேரமாக மாற்றினார் (வ. 38). “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா” (வ.40) என்றார்.
தம் ஜீவனைச் சிலுவையில் தியாகமாய்த் தந்து, நமது பாவங்களுக்கான தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டு, லாசருவை மரணத்திலிருந்து எழுப்பியதுபோலவே, நமக்கும் இயேசு புதுவாழ்வளிக்கிறார். நாம் நமது பாவக்கட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருடைய நித்திய அன்பினால் புதிதாக்கப்பட்டுள்ளோம். மேலும் நமது வாழ்வின் போக்கை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுள்ளோம்.
உங்கள் வாழ்வைத் தேவன் எவ்வாறு மாற்றினார்? உங்களுடைய சாட்சியைக் கொண்டு எவ்வாறு பிறரையும் அவரோடு நெருங்கும்படி செய்வீர்கள்?
பரலோகத் தகப்பனே, சிலசமயம் நீர் என் வாழ்வை மாற்றியதை அற்பமாக எண்ணிவிடுகிறேன். என்னை ஒருபோதும் விட்டுக்கொடாமல் இருப்பதற்காக உமக்கு நன்றி.