அந்தச் சபையின் ஸ்தோத்திரக் கூடுகையின் முடிவில், விசுவாசிகள் தங்கள் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும்வண்ணமாக சுற்றிநின்று நடனமாடினர். ரவி சற்றுத் தள்ளி நின்று, ஒரு பெரிய புன்னகையுடன் அதை ரசித்தார். இதுபோன்ற தருணங்கள் தனக்கு எவ்வளவாய் பிடிக்கிறது என்று வியந்தவாறே, “இப்போது இது என் குடும்பம், சமுதாயம், நான் நேசிக்கவும், நேசிக்கப்படவும் உரித்தான ஓரிடத்தைக் கண்டுகொண்டேன்” என்றார்.
சிறுவனாக, ரவி மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்தப்பட்டு மகிழ்ச்சியை இழந்திருந்தார். ஆனால், அருகேயிருந்த திருச்சபையினர் அவரை வரவேற்று இயேசுவை அறிமுகப்படுத்தினர். அவர்களுடைய ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இவரைத் தொற்றிக்கொள்ளவே, இயேசுவைப் பின்பற்றத் துவங்கி, நேசிக்கப்படுகிறவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும் உணர்ந்தார்.
சங்கீதம் 133 ல், தாவீது “நன்மையும் இன்பமுமான” தேவபிள்ளைகளின் ஐக்கியத்தை விவரிக்க வல்லமையான உருவகங்களைப் பயன்படுத்துகிறார். “அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்” (வ. 2) எனக் கூறுகிறார். இவ்வகையான அபிஷேக முறை பண்டைக்கால வழக்கமாகும், சிலசமயம் வீட்டிற்கு வரும் விருந்தாளியைக் கூட இப்படியே வரவேற்பர். மேலும் தாவீது, “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வ.3) என்று இந்த ஐக்கியமானது ஜீவனையும் ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறதாகக் கூறுகிறார் (வ.3). தைலமானது அறைமுழுதும் வாசனையைப் பரப்பும், பனியானது வறண்ட நிலத்தை ஈரமாக்கும். நாம் கிறிஸ்துவோடு ஐக்கியப்படுகையில், தனிமையானவர்களை ஏற்றுக்கொள்வது போன்ற பல நன்மையும், இன்பமுமான நன்மைகளை தேவன் நம் மூலமாக அளிப்பார்.
உங்கள் சமுதாயத்தில் ஒற்றுமையாம் பனியை நீங்கள் எப்போது கண்டீர்கள்? சபைக்கு வரும் உங்களுக்கு அறிமுகமில்லாதவர்களோடு நீங்கள் எப்படிப் பழகுவீர்கள்?
இயேசுவே, நான் சுலபமாய் நேசிக்கக்கூடியவர்களிடம் மாத்திரமல்ல, பழகுவதற்கு சவாலாய் உள்ளவர்களிடமும் உமது அன்பை வெளிப்படுத்த எனக்குதவும்.