ஒருமுறை நானும் என் மனைவியும் பெரிய ஜன்னல்களும், தடிமனான கற்சுவர்களுமுடைய அழகான கடற்கரை விடுதியொன்றில் தங்கியிருந்தோம். ஒரு நாள் மத்தியான வேளையில், அப்பகுதியில் புயல் சூழவே, கடல் கொந்தளித்து, எங்கள் அறையின் ஜன்னல்களைச் சீற்றமான அலைகளால் மோதியது. ஆனால் நாங்கள் அமைதியாயிருந்தோம். ஏனெனில் விடுதியின் மதில்கள் வலிமையாகவும், அஸ்திபாரங்கள் உறுதியாகவும் இருந்தன. வெளியே அலைகள் கொந்தளிக்க, எங்கள் அறையே எங்களுக்குப் புகலிடமானது.
அடைக்கலம் என்பது வேதாகமத்தின் முக்கிய கருப்பொருளாகும், ஏனெனில் அது தேவனிடமிருந்தே துவங்குகிறது. “நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.” (ஏசாயா 25:4) என்று ஏசாயா கூறுகிறார். பண்டைய இஸ்ரவேலில், அடைக்கல பட்டணங்களைக் கட்டுவதாகட்டும் (எண்ணாகமம் 35:6), அல்லது தேவையிலுள்ள அந்நியர்களை உபசரிப்பதாகட்டும் (உபாகமம் 10:19), அடைக்கலம் என்பது தேவ ஜனங்கள் கொடுக்கக் கூடியதும் கொடுக்க வேண்டியதுமான ஒன்றாகக் கருதப்பட்டது. இன்று நாம் வாழும் மனிதாபிமானமற்ற உலகில், இத்தகைய கொள்கைகள் நமக்கு வழிகாட்டும். இதுபோன்ற சூழல்களில், அடைக்கலத்தின் தேவனானவர், நம்மைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புகலிடமாக்குவாராக.
எங்கள் விடுதியைத் தாக்கிய புயல் மறுநாளே ஓய்ந்துவிட்டது. அமைதியான கடல், வெப்பமான சூரியன், பளபளக்கும் கடற்பாசி என எல்லாம் மாறியிருந்தன. இயற்கை சீற்றங்களுக்கு அல்லது கொடுங்கோலாட்சிக்குத் தப்பியோடுபவர்களுக்கு (ஏசாயா 25:4), இன்றைக்கான அடைக்கலத்தையும், நாளைக்கான நம்பிக்கையையும் தருவதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துவராக என்ற காட்சியே அப்பொழுது எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
எப்போது நீங்கள் தேவனில் அடைக்கலம் புகுந்தீர்கள், யார் மூலமாக அதைக் கண்டுகொண்டீர்கள்? நெருக்கடியில் உள்ளவர்களுக்கு உதவுவதில் இன்று நீங்களும் பங்கேற்கலாம்.
அடைக்கலமான தேவனே, தேவையில் இருப்பவர்கள் அடைக்கலமும், நம்பிக்கையும் பெற, உமது பிள்ளையாகிய என்னைப் பெலப்படுத்தும்.