2015 ஆம் ஆண்டின் ஓர் ஆய்வின்படி இந்தியாவிலேயே மகிழ்ச்சியான நகரமாகச் சண்டிகர் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின்படி, சண்டிகர் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நேரத்தை செலவிட்டனர். மேலும் தங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் கொண்டுள்ள உறவை அதிகம் மதித்தனர். நீங்கள் சண்டிகர் சென்றால், வாரவிடுமுறைகளில் மதிய உணவோ அல்லது இரவு உணவோ ஒன்றாக உண்ணும் அநேக குடும்பங்களை உணவகங்களில் காணலாம். தங்களுக்குப் பிரியமானவர்களுடன் ஒன்றாக அமரும் நேரங்கள் இவர்கள் உள்ளங்களைப் பூரிக்கச் செய்தது.

எபிரெய ஆக்கியோன், ஒரே சமூகமாக ஒன்றுகூடுவதை ஊக்குவிக்கிறார். கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் தங்கள் விசுவாசத்தில் பொறுமையோடிருக்க வேண்டிய கடினமான நாட்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார். நமது இரட்சகர் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனால் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்ற நிச்சயத்தை இயேசு நமக்களித்திருந்தாலும் வெட்கம், சந்தேகம் மற்றும் எதிர்ப்புகளோடு நமக்குப் போராட்டங்களுண்டு. நாம் ஒன்று கூடி வருவதால் ஒருவரையொருவர் ஊக்குவிக்கும் பாக்கியம் நமக்குண்டு. விசுவாசிகளோடு பகிர்ந்துகொள்வதால், “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து” (எபிரெயர் 10:24) இருக்க முடியும். இது நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தும்.

நண்பர்களுடன் ஒன்றுகூடுவது என்பது எப்போதும் நமக்கு சந்தோஷம் அளிக்காது. எனினும், இது வாழ்வின் விரக்திகளின் மத்தியில் நமது விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேதம் காட்டும் ஒரு வழிமுறையாகும். நமது சபையின் சமூகமாக ஒன்றுகூடுதலுக்கும், உள்ளங்கள் பூரிக்கும் எளிய கூடுகைகளுக்கும் நமது வீடுகளைத் திறந்து கொடுப்பதற்கு இதைவிட மேலான காரணம் உண்டோ?