கிராண்ட் கேன்யன் வழியாக, இருபத்தைந்து நாட்கள் மிதவைப் படகு பயணத்திற்கு பிறகு, சாக் எல்டரும் அவரது நண்பர்களும் கரை வந்துசேர்ந்தனர். அவர்களின் படகுகளை மீட்டெடுக்க வந்த நபர் கோவிட்-19 வைரஸ் பற்றி அவர்களிடம் கூறினார். அவர்கள் அதை நம்பவில்லை, அவர் கேலி செய்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியதும் அவர்களின் தொலைபேசிகள் பெற்றோரின் அவசர செய்திகளுடன் வந்து சேர்ந்தன. சாக்கும் அவனது நண்பர்களும் திகைத்தனர். அவர்கள் மீண்டும் ஆற்று பயணத்திற்கு திரும்பிப்போய் தற்போதைய தொற்று பிரச்சனையிலிருந்து விடுபட எண்ணினர்.
பாவ உலகத்தில், அறிவானது வேதனையை கூட்டக்கூடியதாயிருக்கிறது. பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்” (1:18) என்று குறிப்பிடுகிறார். குழந்தையின் அறியாமையைக் கண்டு பொறாமை கொள்ளாதவர் யார்? காரணம் இனவெறி, வன்முறை மற்றும் புற்றுநோய் பற்றி குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. நாம் வளர்ந்து, நம்முடைய பலவீனங்களையும் தீய எண்ணங்களையும் பகுத்தறிவதற்கு முன்பு மகிழ்ச்சியாக இருக்கவில்லையா?
எங்கள் மாமா ஏன் அதிகமாக குடிக்கிறார் அல்லது எங்கள் பெற்றோரின் விவாகரத்துக்கு என்ன காரணம்? போன்ற குடும்ப இரகசியங்களை அறிவதற்கு முன்பு நாம் மகிழ்ச்சியாய் இருக்கவில்லையா?
அறிவின் வேதனை விரும்பத்தக்கதல்ல. ஆனால் அவற்றை சகித்துக்கொள்ளவும், அதில் வளரவும் நம்மை ஊக்குவிக்கும், ஒரு உயர்ந்த அறிவு இருக்கிறது. இயேசு என்னும் தேவனுடைய வார்த்தையே நம்முடைய
இருளில் பிரகாசிப்பிக்கும் ஒளி (யோவான் 1:1-5). “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரிந்தியர் 1:30). இயேசுவிடம் சரணடைவதற்கு உங்களுடைய வேதனையே ஒரு காரணம். அவர் உங்களை அறிந்திருக்கிறார், உங்களை பாதுகாக்கிறார்.
எது தெரியாமல் இருந்திருந்தால் நன்றாயிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதை இயேசுவிடம் சொல்லுங்கள். அவரிடத்தில் விட்டுவிடுங்கள். எப்போதெல்லாம் அது உங்களை காயப்படுத்துகிறதோ, அப்போதெல்லாம் அதை இயேசுவிடம் மீண்டும் கொண்டுசெல்லுங்கள்.
இயேசுவே, என்னால் வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் அது என்னை உம்மிடமாய் திரும்பச் செய்கிறதென்றால், அதை நான் சகித்துக்கொள்கிறேன்.