மான் குடும்பத்தை சேர்ந்த, இம்பாலா என்று அழைக்கப்படும் ஒருவகையான மான் இனம், பத்து அடி உயரம், முப்பது அடி நீளம் வரை தாவக்கூடியது. அது வாழும் ஆப்பிரிக்க காடுகளில், இந்த சுபாவம் அதற்கு தேவைதான். ஆனால் மிருகக்காட்சிசாலைகளில் இவ்வகை இம்பாலா மான்களை அடைத்து வைத்திருக்கும் இடத்தின் மதிற்சுவர்களின் உயரம் வெறும் மூன்று அடிதான் இருக்குமாம். இந்த அளவிற்கு உயரம் தாண்டக்கூடிய மான்களை குறுகிய சுவருக்குள் எப்படி அடைத்து வைக்கமுடியும்? இது எப்படி சாத்தியமாகிறது என்றால், இம்பாலா மான்கள் தரையிரங்கும் இடத்தை பார்க்க இயலாவிடில், அது தாவ முயற்சிக்காதாம். மூன்று அடி உயரமுள்ள சுவர்கள், தூரத்தை பார்க்கவிடாமல் அதின் பார்வையை மறைப்பதால், அந்த சுவரின் மறுபக்கத்தில் இருப்பதென்ன என்பது அதற்குத் தெரியாது, அதினால் அது தாவ முயற்சிக்காதாம்.

மனிதர்களாகிய நாமும் அதிலிருந்து வேறுபட்டவர்கள் இல்லை. நாம் அடுத்த அடி எடுத்து வைக்குமுன்னரே விளைவு என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். விசுவாச வாழ்க்கையும் சிலவேளைகளில் அப்படியிருக்கிறது. கொரிந்து சபைக்கு பவுல் எழுதும்போது, “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” (2 கொரிந்தியர் 5:7) என்று நினைவூட்டுகிறார்.

“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிக்கும்படிக்கு இயேசு நமக்கு கற்றுக் கொடுத்தார். அதற்காக அதின் விளைவை நாம் முன்கூட்டியே அறியமுடியும் என்று அர்த்தமல்ல. விசுவாசத்தில் வாழ்வதென்பது, தேவனுடைய சித்தத்தை நாம் அறியமுடியாவிட்டாலும், அவருடைய நன்மையான நோக்கத்தை நம்பி நடப்பதென்பதுதான். வாழ்க்கை கேள்விக்குறியாய் மாறும்வேளைகளில் அவருடைய மாறாத அன்பின் மீது நாம் நம்பிக்கை வைக்கமுடியும். வாழ்க்கை நம்மை எங்கு தூக்கி எறிந்தாலும் “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க” நாடுவோம் (2 கொரிந்தியர் 5:9).