தேவன் தாழ்மையை ஏன் கனப்படுத்துகிறார் என்னும் கேள்விக்கு பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த விசுவாசி ஆவிலாவின் தெரசா உடனே பதில் கண்டுபிடித்தார்: ஏனென்றால், தேவன் என்பது உயர்வான உண்மை, அதேபோல் தாழ்மையும் உண்மை… நமக்குள் இருக்கும் நல்லவைகள் எதுவுமே நம்மிடமிருந்து வருவதில்லை. மாறாக, தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரத்தைப் போல, கிருபையின் தண்ணீரண்டையிலிருந்தும், நம்முடைய படைப்புகளுக்கு உயிர்கொடுக்கும் சூரியனிலிருந்தும் தான் நம் உழைப்பிற்கு பலன் கிடைக்கிறது. தெரசா, “தாழ்மையே ஜெபத்தின் அஸ்திபாரம்; ஜெபத்தில் எந்த அளவிற்கு நம்மை தாழ்த்துகிறோமோ, அந்த அளவிற்கு தேவன் நம்மை உயர்த்துவார்” என்று ஜெபமே அந்தத் மனத்தாழ்மையை நமக்கு கொடுக்கும் என அறிவுறுத்துகிறார். 

தாழ்மையைக் குறித்த தெரசாவின் வார்த்தைகள் யாக்கோபு 4ஆம் அதிகாரத்தின் வார்த்தைகளை எதிரொலிக்கிறது. அதில் யாக்கோபு, தேவ கிருபையை சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு விரோதமான பெருமையைக் குறித்து எச்சரிக்கிறார் (வச. 1-6). பேராசை, மனச்சோர்வு, தொடர் பிரச்சனைகள் ஆகியவைகளால் சூழப்பட்ட வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விடுபெறுவதற்கு ஒரே வழி, நம்முடைய பெருமையை அகற்றி, மனத்தாழ்மையினால் நம்முடைய இருதயத்தை நிறைப்பதே என்று யாக்கோபு வலியுறுத்துகிறார். இன்னும் தெளிவாய் சொன்னால், “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (வச. 10). 

கிருபையின் தண்ணீரண்டையில் நாம் நாட்டப்படுவோமாகில், பரத்திலிருந்து வரும் ஞானத்தினால் நாம் போஷிக்கப்படுவது நிச்சயம் (3:17). அவரில் நிலைத்திருந்தால் மாத்திரமே நாம் சத்தியத்தில் பலப்பட முடியும்.