விடுமுறை நாட்களில் நானும் எனது கணவரும் எலியட் கடற்கரையோரமாய் நடந்துகொண்டிருக்கையில், அங்கே ஆமை முட்டைகள் கூடையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்தோம். அதை வைத்திருந்த நபர், ஒவ்வொரு நாள் இரவும் ஒரு தன்னார்வ குழுவினர்களைக் கூட்டிக்கொண்டு, கடல் ஆமைகள் இடும் முட்டைகளை கவனமாய் சேகரிப்பதாகச் சொன்னார். முட்டையிலிருந்து வெளிவரும் கடல் ஆமைக் குஞ்சுகள், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் அச்சுறுத்தலினால் உயரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. “என்னதான் நாங்கள் முயற்சி செய்தாலும்,” ஆயிரத்தில் ஒரு ஆமைதான் முதிர்ச்சி பருவத்தை எட்டுகிறது என்றும் அவர் சொன்னார். ஆனால் அதற்காக அவர் சோர்ந்துபோகவில்லை. அந்த ஆமை இனத்தைப் பாதுகாக்கும் அவரது அயராத முயற்சி, கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது. தற்போது நான் கடல் ஆமையின் படம் போட்ட ஒரு பேட்ஜ் அணிந்திருக்கிறேன். அது தேவனுடைய படைப்புகளை பாதுகாக்கவேண்டிய என்னுடைய பொறுப்பை எனக்கு நினைவூட்டுகிறது.
தேவன் உலகத்தை உண்டாக்கியபோது, அனைத்து உயிரினங்களும் அதில் வாழுவதற்கேதுவான ஒன்றாகவே அதை உண்டாக்கினார் (ஆதி. 1:20-25). தமது சாயலாக மனிதனை உண்டாக்கியபோது, “அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்” (வச. 26) என்று தன் நோக்கத்தை பிரதிபலித்தார். தேவனுடைய பிரம்மாண்டமான படைப்புகளை நிர்வகிக்கக்கூடிய ஓர் உக்கிராணத்துவப் பொறுப்பை தேவன் நமக்கு அருளியிருக்கிறார்.
தேவனுடைய படைப்புகளை எந்த விதத்தில் நீங்கள் பராமரிக்கிறீர்கள்? இந்த வாரத்தில் ஓர் நல்ல உக்கிராணக்காரனாய் எவ்விதம் செயல்படப்போகிறீர்கள்?
அன்பான சிருஷ்டிகரும் பாதுகாவலருமான தேவனே, உம்முடைய படைப்பை பாதுகாக்கும் உக்கிராணக்காரனாய் என்னுடைய பொறுப்பை நிறைவேற்றவும், அந்தப் பொறுப்புணர்ச்சியை மற்றவர்களுக்கும் என்னுடைய செய்கைகளினால் போதிக்கவும் உதவி செய்யும்.