“தி ஹ்யூமன் கண்டிஷன்” (The Human Condition) என்னும் பிரபலமான தன்னுடைய புத்தகத்தில், தாமஸ் கீட்டிங் இந்த மறக்கமுடியாத கதையை பகிர்கிறார். ஒரு குருவானவர், தனது வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டு, புல் வெளியில் தேடிக்கொண்டு இருந்தராம். அவரது சீடர்கள் அவர்த் தேடுவதைக் கண்டதும், அவர்களும் தேடினார்களாம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக, புத்திசாலித்தனமான சீடர்களில் ஒருவர், “குருவே, சாவியை எங்கே தொலைத்தீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்க, அதற்கு குருவானவர், “அதை நான் வீட்டில் தொலைத்தேன்” என்று சொன்னாராம். “அப்படியானால் நாம் ஏன் அதை இங்கே தேடுகிறோம்?” என்று கேட்டாராம். அதற்கு அவர், “அதை விட இங்கு தான் வெளிச்சம் அதிகமாக இருக்கிறது” என்று பதிலளித்தாராம்.
“தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கும் நெருக்கமான உறவு என்னும் சாவியை நாம் தொலைத்துவிட்டோம். அந்த அனுபவம் இல்லாமல், நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது நம்மோடிருந்தால் அனைத்தும் நேர்த்தியாய் இருக்கும்” என்று கீட்டிங் நிறைவுசெய்கிறார்.
வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் தேவன் நம்மோடிருந்தார் என்பதை சுலபமாய் மறந்துவிடுகிறோம். ஆனால் எல்லா தவறுகளையும் நாம் தவிர்க்கும்போது, உண்மையான நன்மையை நமக்கு தருவதற்கு அவர் ஆயத்தமாய் இருக்கிறார். மத்தேயு 11இல், தேவன் தம்முடைய வழிகளை “ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து,”; “பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால்” (வச. 25) இயேசு பிதாவை துதிக்கிறார். பின்னர் அவர், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!” (வச. 28) இளைப்பாறுதலுக்காய் தம்மிடம் வரும்படி அழைக்கிறார்.
சிறு குழந்தைகளைப் போலவே, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்” (வச. 29) என்று சொன்ன நம்முடைய குருவிடத்திலிருந்து மெய்யான இளைப்பாறுதலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்துச்செல்ல அவர் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார்.
தவறான இடங்களில் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தேட நீங்கள் எப்போது தூண்டப்படுகிறீர்கள்? அதற்குப் பதிலாக கர்த்தரிடத்தில் சமாதானம், இளைப்பாறுதல் மற்றும் திருப்தியைக் கண்டறிவதற்கு எது உங்களுக்கு உதவுகிறது?
அன்பான தேவனே, என் கண்களுக்கு அழகாய் தெரிகிற காரியங்களினால் நான் எளிதாய் ஈர்க்கப்படுகிறேன். எல்லாவற்றையும் நேர்த்தியாய் பகுத்தறிந்து, உம்மிடத்தில் மெய்யான இளைப்பாறுதலை அடையும் பாதையில் என்னை நடத்தும்.