தகப்பனால் கைவிடப்பட்ட குடும்பத்தில், இரண்டு பிள்ளைகளுக்கு தாயாயிருக்கும் எனது தோழி அல்மாவுக்கு அதிகாலைகள் வேதனையாக இருக்கும். அவள், “எல்லாம் அமைதியாக இருக்கும்போது, கவலைகள் மேலெழுகின்றன. நான் வீட்டு வேலைகளைச் செய்யும்போது, எங்களின் பொருளாதாரக் கவலைகள் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் படிப்புகளைப் பற்றி யோசிப்பேன்” என்று சொல்லுவாள்.
கணவன் அவளைக் கைவிட்டபோது, தன் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை அல்மா சுமந்தாள். “இது கடினம், ஆனால் தேவன் என்னையும் என் குடும்பத்தையும் காண்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் எனக்கு இரண்டு வேலைகளைச் செய்ய பலத்தைத் தருகிறார்; எங்கள் தேவைகளை சந்திக்கிறார், மேலும் ஒவ்வொரு நாளும் அவருடைய வழிகாட்டுதலின் படி என் குழந்தைகளை நடக்க உதவிசெய்கிறார்” என்று அவள் சொல்கிறாள்.
எகிப்திய அடிமைப் பெண்ணான ஆகார், தேவனால் பார்க்கப்படுவதின் அர்த்தம் என்னவென்று புரிந்துகொண்டாள். அவள் ஆபிரகாமால் கர்ப்பமான பிறகு, அவள் சாராளை வெறுக்க ஆரம்பித்தாள் (ஆதியாகமம் 16:4). சாராளும் அவளை தவறாக நடத்தினாள். இதனால் ஆகார் வனாந்திரத்திற்கு தப்பி ஓடினாள். ஆகார் தனக்கும், தனக்கு பிறக்கப்பபோகிற பிள்ளைக்குமான எதிர்காலம் இருண்டிருப்பதைக் கண்டு தனிமையாக உணர்ந்தாள்.
ஆனால் வனாந்திரத்தில் “கர்த்தருடைய தூதன்” (வச. 7) அவளைச் சந்தித்து, “கர்த்தர் உன் துயரத்தைக் கேட்டிருக்கிறார்” (வச. 11) என்று கூறினார். தேவதூதன், ஆகாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டினார். மேலும் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று அவர் அவளுக்கு உறுதியளித்தார். அவளிடமிருந்து நாம் தேவனின் பெயர்களில் ஒன்றான – எல்ரோயீ “என்னைக் காண்கின்ற தேவன்” (வச. 13) என்ற நாமத்தைப் பெற்றுக்கொண்டோம்.
ஆகாரைப் போலவே, நீங்களும் வாழ்க்கையின் கடினமான பயணத்தில் தொலைக்கப்பட்டவர்களாய் தனிமையை உணரலாம். ஆனால் வறண்ட நிலத்திலும் தேவன் உங்களைப் பார்க்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவரை அணுகி, அவர் உங்களை வழிநடத்துவார் என்று நம்புங்கள்.
தேவனை எல்ரோயீ “என்னைக் காண்கின்ற தேவன்” என்று அறிவது உங்கள் தற்போதைய சூழ்நிலைகளைப் பற்றிய உங்கள் பார்வையை எவ்வாறு மாற்றும்? நீங்கள் அவருக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்?
தேவனே, நான் ஒருபோதும் வாழ்க்கையில் தனியாக பயணிக்க வேண்டியதில்லை என்ற உறுதிக்கு நன்றி. நீர் என்னை காண்கிறீர் என்பதையும், நீர் எப்போதும் என்னுடன் இருப்பீர் என்பதையும் நான் அறிவேன்.