குடும்பம் குழந்தைகள் இல்லாத தனியாளாக இருந்த கை பிரையன்ட், நியூயார்க் நகரத்தின் குழந்தைகள் நலத் துறையில் பணியாற்றினார். ஒவ்வொரு நாளும் வளர்ப்பு பெற்றோர்களுக்கான தேவை அதிகம் என்பதை உணர்ந்த அவர் ஓர் தீர்மானத்தை எடுத்தார். கடந்த பத்து ஆண்டுகளில், பிரையன்ட் ஏறத்தாழ ஐம்பதிற்கும் அதிகமான குழந்தைகளை பராமரித்திருக்கிறார். ஒரே தருணத்தில் ஒன்பது குழந்தைகளை பராமரிக்கவும் நேரிட்டது. “ஒவ்வொரு முறை நான் பின்னால் திரும்பிப்பார்க்கும்போது ஒரு குழந்தை தங்குவதற்கு இடமில்லாமல் இருப்பதை நான் காண்கிறேன்” என்று பிரையன்ட் கூறுகிறார். “உங்கள் இருதயத்திலும் வீட்டிலும் இடமிருந்தால், நீங்களும் அதைச் செய்யுங்கள். நீங்கள் அதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.” பிரையன்ட்டால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள், வளர்ந்து தங்களுக்கான வாழ்க்கையை தேடிக்கொண்ட போதிலும், அவர்களிடத்தில் பிரையன்ட் வசிக்கும் வீட்டின் ஒரு சாவி இருக்கும். அவர்கள் ஞாயிற்றுக் கிழமை தோறும் அவர்களுடைய தகப்பனை நேரில் சந்தித்து, உணவருந்தி செல்வது வழக்கம். ஒரு தகப்பனுடைய அன்பை பிரையன்ட் பலருக்குக் காண்பித்திருக்கிறார்.

மறக்கப்பட்ட அல்லது ஒதுக்கிவைக்கப்பட்ட அனைவரையும் தேவன் நேசிக்கிறார் என்று வேதம் கூறுகிறது. தங்களை ஆதரவற்றவர்களாகவும் பெலவீனமுள்ளவர்களாகவும் காணும் விசுவாசிகளோடும் தேவன் இருப்பதாக வாக்குப்பண்ணுகிறார். திக்கற்ற பிள்ளைகளுக்கு தேவன் தகப்பனாயிருக்கிறார்” (சங்கீதம் 68:5). நாம் ஒதுக்கப்பட்டவர்களாய் சோர்ந்துபோய் தனிமையாய் உணர்வோமாகில், நம்மை அணுகி, நம்மை அவரிடம் சேர்த்துக்கொண்டு, நம்பிக்கையை அருளும் தேவன் நம்மோடிருக்கிறார். “தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல்” (வச. 6) ஏற்படுத்துகிறவராய் தன்னை அடையாளப்படுத்துகிறார். மற்ற விசுவாசிகளும் நம்முடைய கிறிஸ்துவின் குடும்பத்தில் அங்கத்தினராயிருக்கிறார்கள்.

தனிமை, புறக்கணிப்பு, உறவு விரிசல்கள் என்று நம்முடைய குடும்பப் பிரச்சனை எதுவாயினும், நாம் நேசிக்கிப்படுகிறவர்கள் என்பதை நாம் அறியலாம். கிறிஸ்துவில் நாம் தகப்பனில்லாத திக்கற்ற பிள்ளைகள் அல்ல.