“இது தான் நான் சாப்பிடும் கடைசி உருளைக்கிழங்கு சிப்ஸ்” என்று நாம் சொல்லி ஐந்தே நிமிடம் ஆன பின்பு, மீண்டும் ஏன் அதை சாப்பிடுவதற்கு ஏங்குகிறோம்? இக்கேள்விக்கு மைக்கேல் மோஸ், தன் “சால்ட் ஷுகர் ஃபேட்” என்ற புத்தகத்தில் பதிலளிக்கிறார். அமெரிக்காவின் பெரிய நொறுக்குத்தீனி உற்பத்தியாளர்கள், தங்கள் தயாரிப்புகளுக்காய் மக்களை எவ்விதம் ஏங்கச் செய்கின்றனர் என்று அவர் விவரிக்கிறார். ஒரு பிரபல நிறுவனம் இது போன்ற மக்களின் ஏக்கத்தை தூண்டும் அம்சத்தை கண்டறியவே நிபுணர்களின் ஆய்விற்கு ஆண்டுக்கு ரூபாய் 222 கோடி செலவழிக்கிறதாம்.
அந்நிறுவனத்தைப் போலல்லாமல், நம் ஆத்துமாவிற்கு திருப்தியை தரும் ஆவிக்குரிய ஆகாரத்திற்காய் ஏங்கும்படி இயேசு நமக்கு உதவுகிறார். இயேசு, “ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோவான் 6:35) என்று கூறுகிறார். இக்கூற்றின் மூலம், அவர் இரண்டு காரியங்களை வலியுறுத்துகிறார்: முதலாவது, அவர் சொல்லுகிற அப்பம் என்பது பொருளல்ல, அது ஒரு நபர் (வச. 32). இரண்டாவது, பாவமன்னிப்பிற்காய் மக்கள் இயேசுவை நம்பும்போது, அவருடன் சரியான முறையில் நெருங்கி, ஆத்துமாவின் சகல ஏக்கங்களுக்கான திருப்தியை அடைவார்கள். நம்மை திருப்தியாய் வழிநடத்தக்கூடிய நித்திய ஜீவ அப்பம் அவரே.
நம் விசுவாசத்தை இயேசுவின் மீது வைக்கும்போது, பரலோகத்திலிருந்து வந்த மெய்யான அப்பமாகிய அவருக்காய் நாம் ஏங்குவோம். அவர் நம்மை பெலப்படுத்தி, நம் வாழ்க்கையை மறுரூபமாக்குவார்.
நாம் ஏங்கித்தவிக்கிற காரியங்கள், ஏன் நம் ஆத்துமாவின் ஏக்கத்தைத் தீர்க்க போதுமானதாக இல்லை என்று எண்ணுகிறீர்கள்? இயேசுவுக்காய் நம்மை ஏங்கச்செய்யும் சில நடைமுறையான செயல்கள் யாவை?
ஜீவ அப்பமாகிய இயேசுவே, உமக்காக நான் ஏங்கவும், நீர் பூரணமாய் கொடுப்பதில் திருப்தியடையவும் எனக்குதவும்.