மக்களை அடையாளம் காணுவதற்கு அவர்களின் கைரேகையை பயன்படுத்தும் வழக்கம் வெகுகாலமாய் வழக்கத்திலுள்ளது. ஆனால் அதையும் ஏமாற்றக்கூடும். அதேபோன்று மனித கண்களிலிருக்கும் கருவிழியின் வடிவத்தையும் அங்கீகார அடையாளமாய் பயன்படுத்துகின்றனர். ஆனால் கான்டாக்ட் லென்ஸின் மூலம் அந்த அடையாளத்தையும் மாற்ற முடியும். இதுபோன்ற அங்க அடையாள தொழிநுட்பத்தை எளிதில் ஏமாற்றிவிடலாம். எது பிரத்யேகமான தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறது? ஒவ்வொரு மனிதனின் இரத்தநாளங்களின் அமைப்புகளை மாற்றியமைக்கவே முடியாது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூமியில் வசிக்கும் எல்லோரைக் காட்டிலும் உங்களுடைய பிரத்யேகமான இரத்தநாள அமைப்பு உங்களை வித்தியாசமான நபராய் அடையாளம் காட்டுகிறது.
நம்மிலிருக்கும் இந்த ஆச்சரியமான வித்தியாசங்களை கருதுகையில், நம் சிருஷ்டிகரை ஆராதிக்கவேண்டும் எனும் வியப்புணர்வே மேலோங்குகிறது. நாம் “பிரமிக்கத்தக்க அதிசயமாய்” உண்டாக்கப்பட்டவர்கள் (சங்கீதம் 139:14) என்று தாவீது நமக்கு நினைப்பூட்டுகிறார். அது அக்களிப்பான ஓர் அங்கீகாரம். சங்கீதம் 111:2, “கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது” என்றும் நம்மை நினைப்பூட்டுகிறது.
அந்த தெய்வீக சிருஷ்டிகரே நம் மொத்த கவனத்திற்கும் பாத்திரர். தேவனுடைய கிரியைகளில் மகிழ்கையில், நாம் அவரிலும் மகிழ வேண்டும். அவர் கிரியைகள் பெரியவை, அவரோ அதைக்காட்டிலும் மகத்துவமானவர். அந்த உணர்வே சங்கீதக்காரனை, “தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்” (சங்கீதம் 86:10) என்று துதிக்கத் தூண்டுகிறது.
உங்களுக்கு பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் விஷயங்கள் யாவை? தேவனுடைய பிரம்மாண்டமான படைப்புகளுக்காய்,எவ்வாறு அவரை இன்று நேரம் ஒதுக்கி துதிப்பீர்கள்?
தகப்பனே, அனைத்து சிருஷ்டிப்புக்கும் காரணமான உம்மை நினைவுகூராமல், படைப்புகளைக் கண்டுமட்டும் ஆச்சரியப்படும் நபராய் நான் திசை திருப்பப்படலாம். பிரமிக்கத்தக்க படைப்புகளைக் கண்டு மட்டுமல்லாது, அதை படைத்தவரைக் கண்டு ஆச்சரியப்பட எனக்கு உதவிசெய்யும்.