மெய்யாகவே ஜீவிக்கிறார்
ஈஸ்டர் ஞாயிறு முடிந்து அடுத்தவாரம் என்பதால், எங்கள் ஐந்து வயது மகன் அநேக உயிர்த்தெழுதல் செய்திகளைக் கேட்டிருந்தான். அவன் பொதுவாக அநேக கேள்விகளைக் கேட்பான். அவற்றுள் பெரும்பாலும் எங்களை திக்குமுக்காடச் செய்யும். நான் வாகனம் ஒட்டிக்கொண்டிருக்க, அவன் பயணியர் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்திருந்தான். வெளியே வேடிக்கை பார்த்தவாறே, ஏதோ ஆழமான சிந்தையிலிருந்தான். “அப்பா” என்றழைத்தவன் சற்று நிறுத்தி, கடினமானதைக் கேட்கும் ஆயத்தத்தோடே, “இயேசு நம்மை மறுபடியும் உயிரோடெழுப்புகையில், நாம் உண்மையாகவே உயிரோடிருப்போமா? அல்லது அது நம்முடைய கற்பனைதானா?” என்று கேட்டான்.
இதைப்பற்றி தாராளமாக பேச நமக்கு துணிச்சல் இல்லையென்றாலும், நம்மில் அநேகருக்கு இதே கேள்வியுண்டு. உண்மையாகவே தேவன் நம்மை குணப்படுத்தப் போகிறாரா? உண்மையாகவே அவர் நம்மை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்புவாரா? தம்முடைய வாக்குத்தத்தங்களை உண்மையாகவே நிறைவேற்றுவாரா?
“புதிய வானம், புதிய பூமி” (வெளி 21:1), என்று அப்போஸ்தலர் யோவான் நம் எதிர்காலத்தை வர்ணிக்கிறார். அந்த பரிசுத்த நகரத்தில், “தேவன்தாமே நம்மோடேகூட இருந்து நம்முடைய தேவனாயிருப்பார்” (வச. 3). கிறிஸ்து ஜெயித்ததினால், நமக்கு கண்ணீரற்ற எதிர்காலம் வாக்குப்பண்ணப்பட்டுள்ளது. தேவனுக்கும் அவர் ஜனத்திற்கும் எதிராக எந்த தீமையும் ஆளுகை செய்யப்போவதில்லை. இச்சிறந்த எதிர்காலத்தில்தான், “மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” (வச. 4) என்று வாக்குப்பண்ணப்பட்டுள்ளது.
அதாவது, தேவன் நமக்கு வாக்குப்பண்ணும் எதிர்காலத்தில், நாம் மெய்யாகவே ஜீவனோடிருப்போம். இப்போது நாம் வாழும் வாழ்வு வெறும் நிழலே என்று சொல்லுமளவிற்கு நாம் மெய்யான வாழ்வை அனுபவிப்போம்.
அன்புசெய்ய துணியலாம்
காரணமேயின்றி என் தோழி எங்கள் பத்தாண்டுகால நட்பை முறித்தபோது, ஜனங்களிடம் நெருங்கிப் பழக தடுமாறும் என் பழைய பழக்கத்திற்கு மீண்டும் திரும்பினேன். என் துயரத்தில் பழகிக் கொண்டிருக்கையில், சி.ஸ்.லூயிஸ் எழுதிய “தி ஃபோர் லவ்ஸ்” (The Four Loves) என்ற புத்தகத்தை சிதைந்த நிலையில் என் அலமாரியிலிருந்து எடுத்தேன். அதில் லூயிஸ், அன்பானது பாதிப்புக்குள்ளாக்கப்பட வேண்டியதே என்ற ஆழமான சிந்தனையைச் சொல்கிறார். ஒருவர் அன்புகாட்ட துணியும்போது அவருக்கென்று “பாதுகாப்பான முதலீடு என்று ஒன்றுமில்லை” என்கிறார். ஒருவர் ஒன்றை நேசிக்கையில், அவர் இருதயம் காயப்படும், உடையும் என்று அவர் குறிப்பிடுகிறார். இதை வாசித்தபின், பேதுரு தன்னை மூன்றுமுறை மறுதலித்த பின்னரும் (யோவான் 18:15-27), இயேசு தம் உயிர்தெழுதலுக்கு பின், மூன்றாம் முறை தம் சீஷருக்கு தரிசனமானதை (யோவான் 21-1-14) வாசிக்கும் என் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியது. இயேசு, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்” (21:15).
மறுதலிக்கப்பட்ட பின்னரும் இயேசு பேதுருவிடம், துணிவோடு பேசினார்; தயங்கவில்லை. சுயநலமில்லாமல் உறுதியாய் பேசினார். அதில் பெலவீனமோ, விரக்தியோ இல்லை. அன்புகாட்ட தாம் விரும்புவதை உறுதிப்படுத்துவதற்கு, அவர் கருணையை வெளிக்காட்டினாரேயன்றி கோபத்தையல்ல.
“என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு” (வச. 17) என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் பேதுரு தம்மை பின்பற்றுவதின் மூலமும் (வச. 19), மற்றவர்களை நேசிக்கும்படியாய் சொல்லும்போதும் (வச. 15–17), அவர் தம்முடைய சீஷர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி நேசிக்க பொதுவாக அழைப்புக் கொடுக்கிறார். “நீ என்னை நேசிக்கின்றாயா?” என்று இயேசு கேட்கையில், அதற்கு நாம் ஒவ்வொரும் பதிலளிக்க வேண்டும். நம் பதிலே நாம் பிறரை நேசிக்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வந்து பணியுங்கள்
பல இன மக்கள் ஒன்றாய் இணைந்து தேவனை ஆராதித்து, பாடல்களை மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தனர். ஆனால் அந்த களைத்துப்போயிந்த தாயினால் ஆராதிக்க முடியவில்லை. அழுதுகொண்டிருந்த தன் குழந்தையை ஒருபுறம் தாலாட்ட, மறுபுறம் தன் ஐந்து வயதான பிள்ளைக்கு பாடல் புத்தகத்தை பிடித்துக்கொண்டு, இன்னொருபுறம் நடைபழகும் தன்னுடைய மற்றொரு பிள்ளை ஓடிவிடாமல் பார்த்துகொண்டிருந்தாள். இதை அவளுக்குப்பின் அமர்ந்து கவனித்த ஒரு முதியவர், நடைபழகும் பிள்ளையை ஆலய வளாகத்தில் நடக்கவைக்க அழைத்து சென்றார். மற்றொரு வாலிபப் பெண், மூத்த பிள்ளைக்கு பாடல் புத்தகத்தை தான் பிடித்துக்கொள்வதாக செய்கையில் சொன்னாள். இரண்டு நிமிடங்களில், அந்த தாயின் களைப்பு மாறி, தன் கண்களை மூடி, நிம்மதி பெருமூச்சோடு தேவனை ஆராதித்தாள்.
ஆண்கள், பெண்கள், சிறியோர், பெரியோர், மூத்த விசுவாசிகள், புதிய விசுவாசிகள் என அனைவரும் தன்னை ஆராதிக்க வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார். இஸ்ரவேலின் கோத்திரங்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்குமுன், மோசே அவர்களை ஆசிர்வதிக்கும்படி அனைவரும் கூடிவருமாறு அறிவுறுத்துகிறார். “புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு.. உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும்” (உபாகமம் 31:12-13) எனக் கூறுகிறார். நாம் வாழ்வில் எந்நிலையிலிருந்தாலும், அவருடைய ஜனங்கள் அவரை ஆராதிக்க அவர்களை நாம் ஒன்றுகூட்டுவது தேவனை கனப்படுத்தும் செயல்.
அத்திருச்சபையில் அன்று காலையிலே, அந்த தாயும், அந்த முதியவரும், அந்த வாலிபப் பெண்ணும் தேவ அன்பை பகிர்ந்து அனுபவித்தனர். ஒருவேளை நீங்களும் அடுத்தமுறை சபைக்கு செல்லும்போது, உதவுவதின் மூலம் தேவ அன்பை வெளிப்படுத்தவோ அல்லது கருணையின் செயலை அவருடைய கிருபையாக ஏற்றுக்கொள்ளவோ செய்யலாம்.
வேலைஸ்தலத்தில் சாட்சி
“உனக்கு மிகவும் பிடித்த அந்த துறையின் அளவை குறைக்கவேண்டுமென்றதால் இன்னும் வருத்தமா?" எவிலினின் மேனேஜர் அவளிடம் கேட்டார். “இல்லை" என்று வாயை மூடிக்கொண்டாள். அதைப்பற்றி அவர் கேலிசெய்து கொண்டேயிருந்ததால், அவள் வருந்தினாள். அவள் பல திறமையான நபர்களை கம்பெனியில் சேர்த்து, நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு உதவ முயன்றாள். ஆனால் இடப்பற்றாக்குறை அம்முயற்சியை முடமாக்கிவிட்டது. எவிலின் கண்ணீரோடு போராடினாள், ஆனாலும் தன் மேலாளர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்க தீர்மானித்தாள். அவள் நம்பியிருந்த சில மாற்றங்களை அவளால் கொண்டுவர முடியாமல் போயிருக்கலாம், ஆனால் அவளுடைய வேலையை தன்னால் இயன்றமட்டும் சிறப்பாக அவளால் செய்ய முடிந்தது.
அப்போஸ்தலன் பேதுரு தன் முதல் நிருபத்தில், முதலாம் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு, “மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள்" (1 பேதுரு 2:13) என்று வலியுறுத்துகிறார். கடினமான பணிச்சூழலில் உத்தமமாயிருப்பது கடினம். ஆனால் நாம் ஏன் தொடர்ந்து நன்மை செய்ய வேண்டுமென்ற காரணத்தை, “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி" (வச. 12) பேதுரு விவரிக்கிறார். கூடுதலாக, நம்மை காணும் மற்ற விசுவாசிகளுக்கு பக்தியான எடுத்துக்காட்டாக நம்மை காட்டிக்கொள்ளலாம்.
நம்முடைய வேலைக்கு துரோகம் இழைக்கும் பணிச்சூழலில் நாமிருந்தால், கூடுமானால் வேலையை விட்டுவிடுவதே சிறந்தது (1 கொரிந்தியர் 7:21). “அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்" (1 பேதுரு 2:20) என்பதை நினைவுகூர்ந்து, ஆவியானவரின் துணையோடு நம் வேலையில் நன்மை செய்வதை தொடருவோமாக. நாம் அதிகாரத்திற்கு கீழ்ப்படிகையில், பிறர் தேவனை பின்பற்றவும், அவரை மகிமைப்படுத்தவும் காரணமாயிருக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.