Archives: பிப்ரவரி 2022

odb

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தாராளமான விசுவாசம்

சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசியல் தலைமையின் கொந்தளிப்பான மாற்றத்திற்குப் பிறகு, தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளை ஏற்றுக்கொள்ள எங்கள் சபையும் அழைக்கப்பட்டது. அநேக குடும்பங்கள், ஒரு சிறிய பையில் தங்களால் இயன்றதை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். எங்கள் சபை குடும்பங்களில் பலர் தங்கள் வீடுகளில் அவர்களை ஏற்றுக்கொண்டனர். சில வீடுகளில் இடவசதி மிகக்குறைவாகவே இருந்தது.

அவர்களுடைய விருந்தோம்பல், இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தில் பிரவேசித்தபோது அவர்களுக்குத் தேவன் தந்த மூன்று கட்டளைகளைப் பிரதிபலிக்கிறது (உபாகமம் 24:19-21). விவசாயம் செய்யும் சமூகமாக, அறுவடையின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர். அடுத்த ஆண்டு வரை தாக்குப்பிடிக்க அவர்களுக்குப் பயிர்கள் அவசியம். இதுவே தேவன், "அதைப் பரதேசிக்கும் திக்கற்றபிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக" (வ.19) என்று கட்டளையிடவும், அவரை நம்பும்படி அழைக்கவும் செய்தது. தங்களுக்கு போதுமானது உள்ளது என்று அறிந்து மட்டும் கொடுக்காமல், தேவனின் பராமரிப்பை நம்பும் உள்ளத்திலிருந்து கொடுத்து, இஸ்ரவேலர்கள் தாராள மனப்பான்மையை கடைப்பிடித்தனர்.

இத்தகைய விருந்தோம்பல், அவர்களும் "எகிப்திலே அடிமையாயிருந்ததை" (வ.18, 22) நினைவூட்டுவதாகவும் இருந்தது. அவர்கள் ஒரு காலத்தில் நசுக்கப்பட்டு, ஆதரவற்றிருந்தனர். அவர்களின் உதாரத்துவம் அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த தேவனின் கிருபையை நினைவூட்டுவதாக இருந்தது.

இயேசுவின் விசுவாசிகளும் உதாரத்துவமாய் இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறார்கள். "அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே" (2 கொரிந்தியர் 8:9) என்று பவுல் நமக்கு நினைப்பூட்டினார். அவர் நமக்களித்ததால் நாமும் அளிக்கிறோம்.

 

குணமாகுதலுக்கான நம்பிக்கை

முதுகுத் தண்டு பாதிப்புகளால் முடமானவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் புதிய வழி உருவாகியுள்ளது. தசைகள் மற்றும் மூளைக்கு இடையேயுள்ள  நரம்பியல் பாதைகளை மீண்டும் இணைக்க, நரம்பு வளர்ச்சியைத் தூண்டும் வழியை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முடங்கிய எலிகள் மீண்டும் நடக்க இந்த மறுவளர்ச்சி உதவுகிறது. மேலும் இந்த சிகிச்சையானது மனிதர்களுக்குப் பாதுகாப்பானதா மற்றும் பயனுள்ளதா என்பதைத் தொடர் சோதனை கண்டறியும்.

.முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஞ்ஞானம் எதைச் சாதிக்க விரும்புகிறதோ, அதை இயேசு அற்புதங்கள் மூலம் செய்தார். பெதஸ்தாவில் உள்ள குளத்தை அவர் பார்வையிட்டபோது, ​​நோய்வாய்ப்பட்ட பலர் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையில் அலைமோதிக்கொண்டிருந்தனர். இயேசு, அவர்களுள் "முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த" (யோவான் 5:5) ஒரு மனுஷனைத் தேடினார். அவன் உண்மையாகவே சுகமடைய விரும்புவதை உறுதிசெய்த பின்னர், கிறிஸ்து அவனை எழுந்து நடக்குமாறு அறிவுறுத்தினார், "உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான்" (வ. 9)

நமது உடல் உபாதைகள் அனைத்தும் தேவனால் குணமாகும் என்று நமக்கு வாக்களிக்கப்படவில்லை. அன்று இயேசுவால் குணமடையாத மற்றவர்களும் குளத்திலிருந்தனர். ஆனால் அவர் மீது நம்பிக்கை வைப்பவர்கள் விரக்தியிலிருந்து நம்பிக்கையும், கசப்பிலிருந்து கருணையும், வெறுப்பிலிருந்து அன்பையும், குற்றஞ்சாட்டுவதிலிருந்து மன்னிக்கும் மாண்பையும் பெற்று ,அவர் தரும் குணத்தை அனுபவிக்க முடியும்.எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் (அல்லது தண்ணீர் குளமும்) அத்தகைய சிகிச்சையை நமக்கு வழங்க முடியாது; அது விசுவாசத்தால் மட்டுமே வரும்.

சேவை மனப்பான்மை

எனது "மாமா" மோகன் காலமானபோது, ​​​​பலர் பலவகையான அஞ்சலிகளைச்  செலுத்தினர். இருப்பினும் அந்த இறுதி மரியாதைகள் அனைத்தும் ஒன்றையே மையமாகக் கொண்டிருந்தன; மோகன் பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் தேவன் மீதான தனது அன்பைக் காட்டினார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் நிராயுதபாணியாகப் போர்க்களம் சென்று அங்கே மருத்துவ பணியாற்றினார், இதுவே அவரது சேவை மனப்பான்மைக்கு இணையற்ற உதாரணம்.  தனது துணிச்சலுக்காக இராணுவத்தின் உயர்ந்த கெளரவங்களைப் பெற்றார், ஆனால் மோகன் போரின் போதும், அதற்குப் பின்னரும், தனது இரக்கமுள்ள சேவைக்காகவே மிகவும் நினைவுகூரப்பட்டார்.

மோகனின் தன்னலமற்ற தன்மை, கலாத்தியருக்கு  பவுல் எழுதியதை நினைவூட்டுகிறது:"சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்" (கலாத்தியர் 5:13) என்றெழுதினார்.  ஆனால் எப்படி? நாம் உடைந்திருக்கையில், பிறரைக் காட்டிலும் நமக்கே முன்னுரிமை கொடுக்க தூண்டப்படுகிறோம். எனவே இந்த இயற்கைக்கு மாறான தன்னலமற்ற தன்மை எங்கிருந்து வருகிறது?

பிலிப்பியர் 2:4-5ல் பவுல், “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என்று ஊக்கமளிக்கிறார். கிறிஸ்து நம்மீதுள்ள அதீத அன்பால் சிலுவையில் மரணத்தைக் கூட அனுபவிக்கத் தயாராக இருந்ததை பவுல் விவரிக்கிறார். அவருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் மனதை நம்மில் உண்டாக்கும்போது மட்டுமே, நாம் பிரித்தெடுக்கப்பட்டு பிறருக்காகத் தியாகம் செய்ய இயலும். அது இயேசு நமக்காக தம்மையே கொடுத்தபோது செய்த அதீத தியாகத்தைப் பிரதிபலிக்கும். நம்மில் உள்ள ஆவியானவரின் கிரியைக்கு நாம் அடிபணிவோமாக.