ஒரு கோடை விடுமுறையில், ஓர் ஏரிக்கரையில் அமர்ந்து என் வேதத்தை வாசித்தவாறே, என் கணவர்  மீன் பிடிப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு வாலிபன் எங்களை அணுகி நாங்கள் வேறொரு தூண்டிலை பயன்படுத்தும்படிக்கு பரிந்துரைத்தார். என்னை சற்று நோட்டமிட்டபின் பரபரத்த குரலில், “நான் சிறையில் இருந்தேன்” என்றார். பின்னர், என் கையிலிருந்த வேதத்தை சுட்டிக்காட்டி,” என்னை போன்றவர்களை குறித்து தேவன் உண்மையாகவே அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று பெருமூச்சுவிட்டார்.

மத்தேயு 25ஐ திருப்பி, சிறைச்சாலையில் உள்ளவர்களை சந்திக்கும் தனது சீடர்களை குறித்து இயேசு சொல்வதை சத்தமாக அவருக்கு வாசித்தேன்.

தமது பிள்ளைகளுக்கு காண்பிக்கும் இரக்கத்தை, தேவன் தமக்காகவே தனிப்பட்ட முறையில் காட்டும் அன்பின் செயலாக கருதுவதை (வ.31-40) நான் பகிர்ந்தபோது, கண்களில் நீர்த்தழும்ப “சிறையில் இருப்பதனை குறித்து அவ்வாறு சொல்லப்பட்டுள்ளதா?” என்றார்.

பின்னர், “என் பெற்றோரும் என்னை மன்னித்தால் எவ்வளவு நலமாயிருக்கும்!” என்று தலைகுனிந்தபடி சொன்னவர். “இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி போய், தன்னுடைய சிதைந்த வேதாகமத்துடன் திரும்பி, அதை என்னிடம் அளித்து, “அந்த வார்த்தைகளை நான் எங்கே பார்க்க முடியும் என்று காட்டுவீர்களா?” என்று கேட்டார். சந்தோஷமாக தலையசைத்த நான், என் கணவரோடு அவரை அணைத்து அவருக்காகவும், அவர் பெற்றோருக்காகவும் ஜெபித்தோம் பின்னர் எங்களைத் தொடர்பு கொள்ளும் தகவல்களை பரிமாறி கொண்டோம் மேலும் அவருக்காக தொடர்ந்து ஜெபித்தோம். 

நாம் எல்லோருமே ஏதோ ஒரு கட்டத்தில் நேசிக்கப்படாதவர்களாகவும், வேண்டாதவர்களாகவும், தேவையுள்ளவர்களாகவும் உணர்கிறோம் அல்லது சரீர பிரகாரமாகவோ, உணர்வு ரீதியாகவோ சிறையில் இருக்கிறோம். (வ.35-36)  அப்பொழுதெல்லாம் தேவனுடைய அன்பான மனதுருக்கத்தையும், அவருடைய மன்னிப்பையும் நமக்கு நினைப்புட்டுபவர்கள் தேவைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு ஆதரவளிக்கும் வாய்ப்பு நமக்கும் கிடைக்கும். நாம் செல்லும் இடமெல்லாம் அவருடைய சத்தியத்தையும், அன்பையும் பரவச் செய்யும்போது தேவனுடைய மீட்கும் திட்டத்தில் நாமும் பங்காற்றலாம்.