தேவனிடமிருந்து ஒளித்துக்கொள்ளுதல்
நான் கண்ணாமூச்சி விளையாடியபோது என் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தேன். என் சிநேகிதிகள் ஒளிந்துகொள்ள இடத்தைத் தேடி சென்றனர். மணிக்கணக்காய் அலமாரி, டிரங்க் பெட்டி, குளியலறை என்று தேடியும் ஒரு சிநேகிதியையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அவள், கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த செடியின் பின்னாலிருந்து குதித்தபோது நான் சற்று முட்டாள்தனமாய் உணர்ந்தேன். அவள் ஒளிந்துகொண்டபோது, அவளின் தலையை மட்டுமே அந்த செடி மறைத்திருந்தது, அவள் உடல் முழுவதும் பார்க்கக்கூடிய வகையில் வெளியரங்கமாகவே இருந்தது.
தேவன் அனைத்தும் அறிந்தவர். ஆதலால் ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் ஒளித்துக்கொண்டபோதும், அவர்கள் அவரின் தெளிவான பார்வையில் (ஆதியாகமம் 3:8) இருந்தனர். அவர்கள் திடீரென்று ஏற்பட்ட விழிப்புணர்வாலும், அவமானத்தாலும், தாங்கள் செய்த தவறான செயலுக்காகவும், தேவன் உண்ணக்கூடாது என்று விலக்கி வைத்த மரத்தின் கனியைப் புசித்ததினாலும் தங்களை ஒளித்துக்கொண்டனர்.
ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் அவரை விட்டு விலகினர். கோபத்தில் அவர்களை விட்டுவிடாமல் “நீ எங்கே இருக்கிறாய்” என்று அவர் வெளியே கொண்டுவர முயன்றார். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அவருக்கு தெரியாது என்று அர்த்தமில்லை; அவர் தாம் அவர்கள் மீது கொண்டிருக்கிற அக்கறையை அவர்கள் அறியவேண்டும் என நினைத்தார் (வச. 9).
என் சிநேகிதி மறைந்திருந்ததை நான் காணவில்லை; ஆனால் தேவன் எப்போதும் நம்மைக் காண்கிறார். நாம் அவருடைய தெளிவான பார்வையில் இருக்கிறோம். அவர் ஆதாம் ஏவாளை பின்தொடர்ந்தது போல, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). நாம் இனி ஒளிந்துகொள்ளத் தேவையில்லை.
வாழும்போதே வழங்குங்கள்
ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் தன்னுடைய வாழ்க்கையின் கடைசி நாட்களில் தன்னுடைய செல்வத்தை மற்றவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு கோடீஸ்வரர் தன்னுடைய பணத்தை வடக்கு அயர்லாந்தில் அமைதி திரும்புவதற்காகவும், வியட்நாமின் சுகாதார அமைப்பை நவீனமாக்கவும் தானம் செய்தார். அவர் இறக்கும் முன் நியூயார்க்கில் உள்ள ஒரு தீவை தொழில்நுட்ப மையமாக மாற்ற 350 மில்லியன் டாலர் (35 கோடி) பணத்தை செலவு செய்தார். அவர், “நான் வாழும்போது தர்மம் செய்வதில் வலுவான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். தாமதமாய் வழங்குவதில் அர்த்தம் இல்லை. இறந்த பின் கொடுப்பதைவிட வாழும்போது கொடுப்பதே அதிக மகிழ்ச்சியைத் தரும்,” என்று கூறுகிறார். வாழும்போதே வழங்குங்கள் - என்னே அற்புதமான அணுகுமுறை!
பிறவிக் குருடனைப் பற்றி யோவான் குறிப்பிடும்போது இயேசுவின் சீஷர்கள், “யார் செய்த பாவம்” (9:2) என்று கேட்டனர். அதற்கு இயேசு, “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான். பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்” என்கிறார் (வச. 3-4). நம்முடைய வேலை இயேசு போன்று அற்புதங்களை நிகழ்த்துவதாய் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவற்றை அன்பின் ஆவியோடே நாம் செய்ய முன்வரவேண்டும். நம்முடைய நேரம், பொருட்கள், செய்கைகள் ஆகிய எல்லாவற்றிலும் தேவனை பிரதிபலிக்கும்பொருட்டு நாம் கொடுக்க முன்வருதல் அவசியம்.
தேவன் உலகை இவ்வளவாய் அன்பு கூர்ந்ததால், அவரைத் தந்தார். பதிலுக்கு நாமும் வாழும்போதே கொடுத்து வாழப் பழகுவோம்.
கற்றுக்கொள்ள விருப்பம்
இளைஞர் ஒருவரிடம் நீங்கள் எப்படி பத்திரிக்கை நிருபரானீர்கள் என்று கேட்டபோது, அவருடைய கல்வியின் மீது அவருடைய தாயாருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் காரணம் என்று பதிலளித்தார். அவரின் அம்மா தினந்தோறும் சுரங்கப்பாதையில் பயணம் செய்யும்போது, அங்கே கிடக்கும் மீதமுள்ள செய்தித்தாள்களைச் சேகரித்துக் கொண்டுவந்து தருவாராம். அவருக்கு விளையாட்டு செய்திகளை விரும்பிப் படிக்க பிடிக்கும் என்றாலும், அந்த செய்தித்தாள்கள் அவருக்கு உலக அறிவை அறிமுகம் செய்து வைத்தது. இறுதியில், அவருக்கு இந்த குறிப்பிட்ட துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
குழந்தைகள் இயற்கையாகவே கற்பதில் ஆர்வமுடனும் விருப்பத்துடனும் இருக்கிறார்கள். வேதாகமத்தை சிறுவயதிலேயே அறிமுகப்படுத்தும்போது, தேவனுடைய அசாதாரணமான வாக்குத்தத்தங்களும், வேதாகம கதாநாயகர்களின் உற்சாகமான சரித்திரங்களும் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். வேதாகம அறிவில் தேறும்போது, பாவத்தின் விளைவுகள், மனம் திரும்புதலுக்கான தேவை, தேவன் மீது வைக்கும் விசுவாசத்தால் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறித்து தெளிவாய் புரிந்துகொள்வார்கள். உதாரணமாக, நீதிமொழிகளின் 1ம் அதிகாரம் ஞானத்தால் அடையும் நன்மைகளைப் பற்றி நேர்த்தியாய் அறிமுகப்படுத்துகிறது (நீதி. 1:1-7). ஞானத்தைக் குறித்த இந்த போதனைகள் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
குறிப்பாய் ஆவிக்குரிய சத்தியங்களை கற்பதில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது விசுவாசத்தில் உறுதியாய் வளருவதற்கு வழிவகுக்கிறது. ஆண்டாண்டுகளாய் விசுவாசத்தில் நடக்கிறவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இந்த தெய்வீக ஞானத்தை பெற்றுக்கொள்ள தொடர்ந்து பிரயாசப்படலாம். “புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் தேறுவான்" என்று நீதிமொழிகள் 1:5 ஆலோசனைக் கூறுகிறது. நாம் நமது இருதயத்தையும் மனதையும் அவருடைய வழிகாட்டலுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் திறந்து வைத்தால், தேவன் நமக்கு கற்றுக்கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டார்.
விழிப்புடன் இரு!
ஒரு ஜெர்மானிய வங்கி ஊழியர் 62.40 யூரோக்கள் பணத்தை ஒரு வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யும்போது, திடீரென்று ஒரு குட்டித் தூக்கம் தூங்கிவிட்டார். எனவே அவரின் கைவிரல் தவறுதலாக “2” என்ற பட்டனை அழுத்திவிட, 222 மில்லியன் யூரோக்கள் (தோராயமாக 1959 கோடி ரூபாய்) அந்த வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. அதனிமித்தம், அந்த பரிமாற்றத்தை சரிபார்க்கவேண்டிய அவருடைய சக வங்கி ஊழியரின் வேலையும் பறிபோனது. அந்த பிழை கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டாலும், அவருடைய இந்த செயல் வங்கி ஊழியர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்தது.
சீஷர்கள் விழிப்பாய் இல்லையென்றால் அவர்கள் பெரிய தவரை செய்ய நேரிடும் என்று இயேசு தம் சீஷர்களை எச்சரித்தார். இயேசு கெத்செமனே என்னும் இடத்திற்கு அவர்களை அழைத்து வந்து ஜெபம்பண்ணும்போது, அவர் இந்த உலக வாழ்வில் அதுவரை அனுபவித்திராத அளவு துக்கமும் வியாகுலமும் அடைந்தார். அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரிடம் ஜெபிக்கவும், அவரோடே கூட விழித்திருக்கும்படியாகவும் கூறினார் (மத்தேயு 26:38). ஆனால் அவர்கள் தூங்கிவிட்டார்கள் (வச. 40-41). அவர்கள் ஜெபிக்கவும் விழித்திருக்கவும் இயலாமல் அவரை மறுதலித்து தோற்றனர். கிறிஸ்துவிற்கு பெரிய தேவை ஏற்பட்டபோது சீஷர்கள் ஆவிக்குரிய விழிப்புணர்வில் குறைவுபட்டனர்.
நாம் இயேசுவின் வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தி, ஆவிக்குரிய விழிப்புணர்வோடும் அர்ப்பணிப்புடனும் ஜெபத்தில் நேரம் செலவிடுவோம். அவ்வாறு செய்யும்போது எல்லா சோதனைகளையும் சகிக்கவும், கிறிஸ்துவை மறுதலிக்கும் பெரிய தவறை செய்யாமல் இருக்கும்படியாகவும் அவர் நம்மை பெலப்படுத்துவார்.