2011ல் நடந்த விளம்பர நிகழ்வின்போது, இரண்டு 73 ஆண்டுகள் கடந்த முன்னாள் கனடியன் கால்பந்தாட்ட லீக் ஆட்டக்காரர்கள், மேடையிலேயே சண்டைபோட்டுக் கொண்டனர். 1963ல் அவர்கள் விளையாடிய ஆட்டத்திற்கான மதிப்பெண் விவகாரத்தில் அவர்களுக்குள் திருப்தியில்லை. ஆட்டக்காரர் ஒருவர் மேடையிலே அடுத்தவரை இடித்தபோது, கூட்டத்தினர் “விட்டுவிடுங்கள் போகட்டும்” என்று கூறினர். பழிவாங்குகிற எண்ணங்களை விட்டுவிடுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள். 

பழிவாங்குகிற எண்ணம் கொண்ட பலரைக் குறித்து வேதம் சொல்லுகிறது. தேவன் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக் கொண்டதால், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலின் மீது எரிச்சலுற்றான் (ஆதியாகமம் 4:5). இந்த வெறுப்பு அதிகமாகி அது கொலையில் போய் முடிந்தது. “காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி அவனைக் கொலை செய்தான்” (வச. 8). “ஏசா யாக்கோபைப் பகைத்து…” ஏனென்றால் யாக்கோபு ஏசாவுக்கு உரிய சேஷ்டபுத்திர பாகத்தை திருடிக்கொண்டான். இந்த வெறுப்பு மிகவும் ஆழமாக இருந்ததால் யாக்கோபு தன் உயிருக்கு பயந்து ஓடினான்.

வேதாகமம் பழிவாங்குதலை செயல்படுத்திய பல உதாரணங்களை முன்வைத்தாலும், அந்த வெறுப்பை அழிக்கும் வழிகளையும், மன்னிப்பையும், ஒப்புரவாகும் வழிமுறைகளையும் அறிவுறுத்துகிறது. பிறரிடம் அன்புகூர தேவன் நம்மை அழைக்கிறார் (லேவியராகமம் 19:18). நம்மை அவமானப்படுத்துபவரையும் காயப்படுத்துபவரையும் மன்னிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும், அனைவரிடமும் சமாதானத்தோடு வாழவும், பழிவாங்குதலை தேவனிடம் விட்டுவிடவும், தீமையை நன்மையால் மேற்கொள்ளவும் (ரோமர் 12:18-21) தேவன் நமக்கு அறிவுறுத்துகிறார். அவருடைய வல்லமையால் இன்றே நாம் பழிவாங்குகிற எண்ணத்தையும் பகையையும் அழிப்போமாக.