ஜானின் சளி இறுமல், நிமோனியா காய்ச்சலாக மாறியது. அதினால் அவர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட அந்த மருத்துவமனையின் ஒருசில தளங்களுக்கு மேலே அவருடைய தாயார் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். தன் தாயின் உடல்நிலையையும் தன்னுடைய உடல் நிலையையும் குறித்து அவர் அதிக கவலைப்பட்டார். ஒரு கிறிஸ்மல் இரவின்போது, “ஓ புனித இரவே” என்று வானொலியில் ஒலித்த அந்த பாடலைக் கேட்ட ஜான், தேவனுடைய சமாதானத்தினால் ஆட்கொள்ளப்பட்டார். இரட்சகரின் பிறப்பைக் குறித்த அந்த பாடலின் வரிகளை அவர் கேட்டார்: “சோர்வுற்ற ஆத்துமாவுக்கு ஒரு நம்பிக்கையாய் அங்ஙனம் ஒரு புதிய மகிமையான காலை உதயமாகிறது.” அதைக் கேட்ட தருணத்தில், அவரைக் குறித்தும் அவருடைய தாயாரைக் குறித்தும் இருந்த கவலை மறைந்தது.
ஏசாயா தீர்க்கதரிசனத்தின் படி, நமக்கு கொடுக்கப்பட்ட அன்பான இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவே சமாதான காரணர் (ஏசாயா 9:6). “மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல்” (மத்தேயு 4:15; ஏசாயா 9:2) வெளிச்சமாகவும் இரட்சிப்பாகவும் உதிக்க, இந்த உலகத்தில் குழந்தையாய் பிறந்த இயேசுவில் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறியது. அவரால் நேசிக்கப்படுகிறவர்கள் கடினமான வாழ்க்கைப் பாதையில் பயணித்தாலும், அவர் அவர்களை சேர்த்துக்கொண்டு சமாதானத்தை அருளுகிறார்.
ஜான்; அந்த மருத்துவமனையில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து சிந்தித்து, அவை அனைத்தையும் மேற்கொள்ளும் சமாதானத்தைப் பெற்றுக்கொண்டார் (பிலிப்பியர் 4:7). கிறிஸ்மஸ் நாட்களில் தன் குடும்பத்தை விட்டு தள்ளியிருந்த அவருடைய விசுவாசத்தையும் நன்றியுணர்வையும் அந்த அனுபவம் அவருக்கு உறுதிப்படுத்தியது. தேவனுடைய பரிசான சமாதானத்தையும் நம்பிக்கையையும் நாமும் பெற்றுக்கொள்வோமாக.
கடினமான வாழ்க்கை சூழ்நிலைகளில் தேவனுடைய சமாதானத்தை நீங்கள் எப்படி அனுபவித்துள்ளீர்கள்? ஏசாயா 9:6ன் எந்த குணாதிசயம் உங்களுக்கு அத்தியாவசிய தேவையாயிருக்கிறது? ஏன்?
சமாதானத்தின் தேவனே, நான் அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிற வேளையில், உம்மிடமாய் திரும்புவதற்கும் உம்முடைய சமாதான பரிசை பெற்றுக்கொள்வதற்கும் எனக்கு உதவிசெய்யும்.