டச்சு தேசத்தின் வீடுகளெங்கிலும் காணப்படும் நீலமும் வெண்மையும் கலந்த பீங்கான் ஓடுகள் டெல்ஃப்ட் என்னும் நகரத்தில் உருவாக்கப்பட்டவைகள். அவைகள் பொதுவாக நெதர்லாந்தின் பிரபலமான காட்சிகளான அழகான நிலப்பரப்புகள், எங்கும் நிறைந்த காற்றாலைகள் மற்றும் மக்கள் வேலை செய்யும், விளையாடும் காட்சிகள் அகியவற்றை பிரதிபலிக்கின்றன. 

19ஆம் நூற்றாண்டில் சார்லஸ் டிக்கன்ஸ் என்பவரால் எழுதப்பட்ட “எ கிறிஸ்மஸ் கேரல்” என்னும் புத்தகத்தில் இந்த பீங்கான் ஓடுகள் எவ்வாறு வேதாகமத்தை உதாரணப்படுத்துகிறது என்பதை விவரிக்கிறார். ஒரு டச்சுக்காரர் இந்த ஓடுகளைப் பயன்படுத்தி கட்டமைத்த குளிர்காயும் நெருப்பிடம் பற்றி அவர் கூறுகிறார். “அதில் காயீன் ஆபேல், பார்வோன் குமாரத்திகள், சேபாவின் ராணிகள்,… மற்றும் கடலில் பயணிக்கும் அப்போஸ்தலர்கள்” என்று அவர் வடிவமைத்துள்ளார். பல குடும்பங்களுக்கு இந்த நெருப்பிடம், குடும்பமாக அமர்ந்து வேதாகமத்தைக் கற்கும் இடமாகவும் கதைகளை பகிருவதற்கு ஏதுவாகவும் உள்ளது. தேவனுடைய குணாதிசயங்களான நீதி இரக்கம் மற்றும் கிருபை ஆகியவைகளை கற்றுக்கொள்ளமுடிகிறது. 

வேதாகமத்தின் சத்தியங்கள் இன்றும் ஏற்புடையதாயிருக்கிறது. சங்கீதம் 78, “பூர்வகாலத்து மறைபொருளை விவரித்து, நாம் கேள்விப்பட்டவைகள் மற்றும் பிதாக்கள் நமக்கு அறிவித்தவைகளை” (வச. 2-3) போதிக்கும்படிக்கு அறிவுறுத்துகிறது. மேலும் “கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும்” (வச. 4,6) பின்வரும் சந்ததிக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் சொல்லும்படிக்கு அறிவுறுத்துகிறது. 

தேவனுடைய துணையோடு, தேவனை முற்றிலும் கனம்பண்ணும் விதத்தில், வேதாகமத்தின் சத்தியங்களை அடுத்த தலைமுறையினருக்கு நேர்த்தியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தும் படைப்பாற்றல் கொண்ட வழிகளை நாம் கண்டறிவோம்.