Archives: நவம்பர் 2021

பராக்கிரமசாலி

1940இல் ஜெர்மானியர்கள் ஊடுருவிய தருணத்தில், நேசிப்பதிலும், வேலைசெய்வதிலும், குடும்பத்தோடும் நண்பர்களோடும் நேரம் செலவழிப்பதிலும் தன் வாழ்க்கையை நடத்திய டயட் ஈமன், கூச்ச சுபாவம் கொண்ட ஒரு சாதாரணமான பெண். “உங்கள் வீட்டிற்கு ஒரு அபாயம் என்றால், ஒரு நெருப்புக் கோழி தன் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்வதுபோல செயல்படவேண்டும்” என்று டயட்  பின் நாட்களில் எழுதுகிறாள். ஜெர்மானிய கலகக்காரர்களை எதிர்த்து நிற்கும் அழைப்பை தேவன் தனக்கு தந்துள்ளதாக எண்ணிய இவள், தன்னுடைய ஜீவனை பணயம் வைத்து, யூதர்களையும் பாதிக்கப்பட்ட மற்ற ஜனங்களையும் ஜெர்மானியர்களின் கண்ணில்படாத வகையில் ஒளித்துவைத்தாள். அடையாளம் தெரியாத இந்த இளம்பெண் தேவனுடைய யுத்தவீராங்கனையாய் மாறினாள். 

டயட்டைப் போன்றே சற்றும் பொருந்தாத சில கதாப்பாத்திரங்களை தேவன் பயன்படுத்திய பல சம்பவங்களை வேதத்தில் நாம் பார்க்கமுடியும். உதாரணத்திற்கு, தேவதூதன் கிதியோனை சந்தித்தபோது, “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என்றான் (நியாய. 6:12). கிதியோன் பராக்கிரமசாலியாகவே தென்பட்டான். அப்போது அவன், இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த மீதியானியரின் கைக்கு தப்புவிக்கும்பொருட்டு, கோதுமையை இரகசியமாய் போரடித்துக்கொண்டிருந்தான் (வச. 1-6,11). அவன் இஸ்ரவேலில் மனாசே கோத்திரத்தில் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் தகப்பன் வீட்டிலுள்ள எல்லோரைக்காட்டிலும் சிறியவன் (வச. 15). அவன் தேவனுடைய அழைப்பை நம்பாமல், அதை உறுதிப்படுத்த பல அடையாளங்களை கேட்கிறான். ஆனாலும் தேவன் அவனைக் கொண்டு மீதியானியரை முறியடித்தார் (7ஆம் அதி. பார்க்க). 

தேவன் கிதியோனை பராக்கிரமசாலியாகப் பார்த்தார். தேவன் கிதியோனோடு இருந்து அவனை ஊக்கப்படுத்தியதுபோல, அவர் நம்மை அவருடைய பிரியமான பிள்ளைகளாய் ஏற்று (எபேசியர் 5:1) சிறிய மற்றும் பெரிய வழிகளில் அவருக்காக வாழ்ந்து, ஊழியம் செய்யும்பொருட்டு நமக்குத் தேவையான அனைத்தையும் நமக்கு அருளுகிறார். 

நன்றியுள்ள இருதயம்

பண்டைய ரோம நாட்டில் செனேகா (கி.மு. 4-கி.பி. 65) என்னும் புகழ்பெற்ற தத்துவமேதை, விபச்சாரம் செய்தார் என்று பேரரசி மெசலினாவினால் குற்றஞ்சாட்டப்பட்டார். செனேகாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பேரரசர் கிளாடியஸ், அவரை குற்றமற்றவராய் பார்த்ததினால், மரண தண்டனைக்கு பதிலாக, அவர் கோர்ஸிகா என்னும் இடத்திற்கு நாடு கடத்தப்பட்டார். இந்த சூழ்நிலை செனேகாவின் நன்றியுணர்ச்சிக்கு புதுவடிவம் கொடுத்தது. அவர் சொல்லும்போது, “படுகொலைகள், கொடுங்கோலாட்சிகள், திருடர்கள், விபச்சாரக்காரர்கள், கொள்ளையர்கள், புனிதர்கள், துரோகிகள் ஆகியோர் எல்லா காலத்திலும் இருப்பர். ஆனால் அவை எல்லாவற்றையும் விட கொடுமையான குற்றம் நண்றியுணர்வில்லாமல் இருப்பதே” என்கிறார்.    

செனேகாவின் காலகட்டத்தில் வாழ்ந்த பவுல் அப்போஸ்தலர் இதை ஏற்றுக்கொண்டார். ரோமர் 1:21ல் நன்றியுணர்வில்லாதிருப்பதே மனுஷீகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் என்று பவுல் எழுதுகிறார். கொலோசெ திருச்சபைக்கு எழுதும்போது, நன்றியுணர்ச்சிக்கு மூன்று தரம் சவால் விடுகிறார். “ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக” (கொலோசெயர் 2:7) என்றும், தேவ சமாதானம் நம்முடைய இருதயங்களை ஆளும்போது, நன்றியறிதலுள்ளவர்களுமாயிருக்கவும் (3:15) அறிவுறுத்துகிறார். மேலும் நன்றியுணர்வே ஜெபத்திற்கும் மையமாய் அமைகிறது (4:2) என்கிறார். 

தேவனின் மாபெரும் தயவே வாழ்க்கையின் மிகச்சிறந்த யதார்த்தங்களை நினைவூட்டுகிறது. அவர் நம்முடைய அன்பிற்கும் துதிக்கும் மட்டுமின்றி, நம்முடைய நன்றியுள்ள இருதயத்திற்கும் பாத்திரர். வாழ்க்கையின் நன்மையான எந்த ஈவும் அவரிடத்திலிருந்தே வருகிறது (யாக்கோபு 1:17). 

கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்ட அனைத்து ஈவுகளுக்கும் நாம் நம்முடைய நன்றியுணர்வை சுவாசம்போல் இயல்பாகவே வெளிப்படுத்தவேண்டும். தேவனுடைய கிருபையுள்ள ஈவுகளுக்கு நம் நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம். 

தேவ சித்தம்

சிலவேளைகளில் தேவசித்தத்திற்கு கீழ்படிவது கடினம். அவர் நம்மை சரியான காரியத்தை செய்ய தூண்டுவார். அவர் நம்மை முறுமுறுப்பில்லாமல் பாடுகளை சகிக்கவும், கடினமான மக்களை நேசிக்கவும், “நீ அதை செய்யக்கூடாது” என்று நமக்குள்ளே ஒலிக்கும் அந்த சத்தத்திற்கு கீழ்ப்படியவும், நாம் எடுக்க விரும்பாத அடிகளை எடுத்து வைக்கவும் அழைத்திருக்கிறார். ஆகையால் ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய ஆத்துமாவைப் பார்த்து, “ஆத்துமாவே, கேள். அமைதியாயிரு: இயேசு என்ன செய்ய சொல்லுகிறாரோ, அதைச் செய்” என்று சொல்லவேண்டும்.  

“தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது” (சங்கீதம் 62:1). “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு” (62:5). இந்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றுபோல் தெரியும். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. தாவீது தன்னுடைய ஆத்துமாவைக் குறித்து சொல்லுகிறார்; பின்னர் தன் ஆத்துமாவிடம் சொல்லுகிறார். “அமர்ந்திருக்கிறது” என்பது மனஅமைதிக்கான தீர்மானம். “அமர்ந்திரு” என்பது அந்த தீர்மானத்தை நினைவுகூருவதற்கான தூண்டுதல்.

தாவீது, தேவ சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து, அமர்ந்திருப்பதை தெரிந்துகொண்டார். நாம் சிருஷ்டிக்கப்பட்டதற்கும் அழைக்கப்பட்டதற்குமான நோக்கமும் அதுவே. “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்கா 22:42) என்பதை ஒத்துக்கொண்டால் நாம் சமாதானமாய் வாழலாம். தேவனை தேவனென்று ஏற்றுக்கொள்வதும் நம்முடைய ஆழமான உணர்வுகளுக்கு அவரே ஆதாரம் என்பதை ஒத்துக்கொள்வதுமே நம்முடைய முதன்மையும் மேன்மையுமான அழைப்பு. “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” (சங்கீதம் 40:8) என்று சங்கீதக்காரன் பாடுகிறான். 

நாம் “நம்புகிறது அவராலே வரும்” என்பதினால், நாம் உதவிக்காய் அவரையே நாடுவது நல்லது (62:5). அவரிடத்தில் உதவி கோரினால், அவர் நம்மை மீட்டுக்கொள்வார். அவரால் செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத எதையும் செய்யும்படிக்கு நம்மை தூண்டமாட்டார். 

நம்பிக்கையை பகிர்தல்

தேவனுடைய பிரியமான பிள்ளையாய், அவளுடைய அங்கீகாரத்தை சாந்தி பெற்றுக்கொள்வதற்கு தேவன் அவளுக்கு எப்படி உதவிசெய்தார் என்று விளக்குவதற்கு, உரையாடலில் வேதவாக்கியத்தை மேற்கோள் காண்பித்தாள். தன்னுடைய வார்த்தைகளை நிறுத்தி, தேவனுடைய வார்த்தைகளை மேற்கோள் காண்பித்த இந்த பள்ளி மாணவி பயன்படுத்திய வசனங்கள் எனக்கே தடுமாற்றமாயிருந்தது. அவளை நடமாடும் வேதாகமம் என்று நான் பாராட்டியபோது அவளின் புருவம் உயர்ந்தது. அவள் யோசித்து, மனப்பாடம் செய்து ஒப்பிக்கவில்லை. அன்றாடம் வேதம் வாசிப்பதினால் அவளுடைய பேச்சில் வேத வாக்கியங்கள் இரண்டற கலந்துவிட்டது. தேவனுடைய நிலையான பிரசன்னத்தில் மகிழ்ந்த அவள், கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சத்தியத்தை பிரகடனப்படுத்த பயன்படுத்திக்கொண்டாள். வேதத்தை ஜெபத்தோடு வாசிக்கவும், நினைவில் வைத்துக்கொள்ளவும், வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தவும் தேவன் பயன்படுத்திய வாலிப பிள்ளைகளில் சாந்தி முதலாவது நபர் இல்லை.     

தீமோத்தேயுவை உற்சாகப்படுத்தி தலைமைத்துவத்தில் அடியெடுத்து வைக்கத் தூண்டிய பவுல் அவர் மீதான நம்பிக்கையைப் பிரதிபலித்தார் (1 தீமோத்தேயு 4:11-16). தீமோத்தேயு சிறுபிராயத்திலிருந்தே வேதத்தில் உறுதியான அஸ்திபாரத்தை ஸ்தாபித்திருந்தார் என்று பவுல் பதிவுசெய்கிறார் (2 தீமோ. 3:15). பவுலைப் போலவே தீமோத்தேயுவும் சந்தேகத்தினால் சோதிக்கப்பட்டார். ஆனாலும் “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்று இருவரும் நம்பினர். “அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்று அவர்கள் உணர்ந்தனர் (2 தீமோ. 3:16-17). 

தேவனுடைய ஞானத்தை நம்முடைய இருதயத்தில் புதைத்து வைத்தால், நம்முடைய இயல்பான பேச்சில் அவருடைய சத்தியமும் அன்பும் வெளிப்படும். அப்போதே, தேவனுடைய நித்திய நம்பிக்கையை செல்லுமிடமெல்லாம் பறைசாற்றும் நடமாடும் வேதாகமமாய் நாம் இருக்கமுடியும்.

மெய்யான ஆராதனை வீரர்கள்

அவளுக்கு திருச்சபைக்கு போவதற்கு கடைசியாய் வாய்ப்பு கிடைத்தது. சபையின் அடித்தளத்தில், ஒரு சிறு குகையை அவள் அடைந்தாள். மெழுகுவர்த்திகள் நிறைந்த அந்த குறுகிய இடத்தில், தொங்கிக்கொண்டிருந்த விளக்குகள், தரையின் ஒரு மூலையைக் காட்டுகிறது. மார்பிள் தரையில் பதினான்கு புள்ளிகள் உள்ள ஒரு வெள்ளி நட்சத்திரம் இருந்தது. பெத்லெகேமில் இயேசு பிறந்தார் என்று பாரம்பரியமாய் நம்பப்படுகிற ஆலயத்தில் அவள் இருந்தாள். ஆனாலும் அந்த இடத்தை விட தேவன் மிகவும் பெரியவர் என்று நம்பினதினால், எழுத்தாளர் ஆனி டில்லார்ட் அந்த இடத்தினால் அப்படியொன்றும் பெரிதாய் ஈர்க்கப்படவில்லை. 

ஆனால் அதுபோன்ற ஸ்தலங்கள் நம்முடைய விசுவாச கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவைகளே. இயேசுவுக்கும் ஒரு பெண்ணிற்கும் இடையில் நடைபெற்ற உரையாடலில் இன்னொரு முக்கியமான ஸ்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்” (யோவான் 4:20) என்று கெர்சோம் மலையைக் குறித்து (உபாகமம் 11:29ஐ காண்க) சமாரிய ஸ்திரீ கூறினாள். எருசலேமை புனிதஸ்தலமாய் கருதி அங்கே ஆராதனை செய்யவேண்டும் என்ற யூத முறைமைக்கு முரண்பாடாய், சமாரியர்கள் கெர்சோம் மலையை புனிதமாய் கருதினர் (வச. 20). ஆனால் ஆராதனை என்பது இடத்தைப் பொருத்தது அல்ல நபர்களைப் பொருத்தது என்று இயேசு அறிவித்தார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும்” (வச. 23). மேசியாவைக் குறித்த தன்னுடைய நம்பிக்கையை அந்த பெண் வெளிப்படுத்தினாள். ஆனால் அவள் மேசியாவிடம் பேசிக்கொண்டிருப்பதை அறியாதிருந்தாள். “அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்” (வச. 26). 

தேவன் எந்த மலைக்கும், பூகோள நிலப்பரப்பிற்கும் உட்பட்டவரல்ல. அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவருடைய சிங்கானத்தை தைரியமாய் அண்டி, “எங்கள் பிதாவே” என்று நாம் கூப்பிடும்போது, அவர் அங்கே இருக்கிறார் என்பதே நம்முடைய மெய்யான மேன்மை.