“மகனே, உனக்கு கொடுப்பதற்கு என்னிடத்தில் அதிகம் இல்லை. ஆனால் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. அதைக் கெடுத்துவிடாதே.” கல்லூரிக்கு போகும்போது ஜெரோமின் தகப்பனார் இந்த வார்த்தைகளைச் சொன்னார். ஒரு விளையாட்டு வீரனாக மேடையில் நிற்கும்போது தனது தந்தையின் இந்த வார்த்தைகளை ஜெரோம் நினைவுகூர்ந்தான். இந்த வார்த்தைகள் ஜெரோமின் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதற்கு ஆதாரமாய், மேடையில் தன் பேச்சை முடிக்கும்போது, தன்னுடைய மகனைப் பார்த்து, “மகனே, நம்முடைய நல்லபெயரைக் காட்டிலும் உனக்கு கொடுப்பதற்கு முக்கியமானது வேறொன்றுமில்லை” என்று சொன்னான்.
கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு நற்பெயர் என்பது மிகவும் முக்கியமானது. கொலோசெயர் 3:12-17ல் நாம் யாருடைய ஸ்தானாதிபதிகள் என்று பவுல் நினைவுபடுத்துகிறார் (வச. 17). குணாதிசயம் என்பது நாம் அணியும் ஆடை போன்றது. ஆனால் இந்த வேதவாக்கியம் அந்த ஆடையின் மேல் இயேசுவின் நாமத்தை எழுதுகிறது: “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” (வச. 12-14). இவைகள் நம்முடைய ஞாயிற்றுக்கிழமை வஸ்திரமல்ல. இந்த வஸ்திரத்தை எல்லா வேளைகளிலும் எல்லா இடங்களிலும் அணிந்து தேவனை பிரதிபலிக்கவேண்டும். இந்த சுபாவங்கள் எல்லாவற்றையும் நம்முடைய வாழ்க்கையில் நாம் பிரதிபலித்தால், அவருடைய நாமம் நமக்கு தரிப்பிக்கப்பட்டுள்ளதை நிரூபிக்கமுடியும்.
ஜெபத்தோடும் கவனத்தோடும் அவரை நாம் பிரதிபலித்தால் நம்முடைய தேவைகளை அவர் சந்திப்பார்.
உங்களுடைய ஆடைகளை நீங்கள் மதிப்பீடு செய்யும்போது, இயேசுவின் சுபாவத்தை உங்களுடைய ஆடை எந்த அளவிற்கு பிரதிபலிக்கிறது? அவருடைய ஞானத்தையும் வல்லமையையும் வழிநடத்துதலையும் சார்ந்து இன்னும் நேர்த்தியாய் அவரை எப்படி பிரதிபலிப்பது?
தகப்பனே, நான் கிறிஸ்துவை தெளிவாய் பிரதிபலிக்காததற்காக என்னை மன்னியும். உம்முடைய நாம மகிமைக்காகவும் கிறிஸ்துவின் நாம மகத்துவத்திற்காகவும் நேர்த்தியான ஆடையை அணிந்துகொள்ள எனக்கு பெலத்தையும் தைரியத்தையும் தாரும்.