கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட முயற்சிகளினால் பல சிறு வியாபாரங்கள் வெகுவாய் முடங்கியது. முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது, வாடகையை எப்படி செலுத்துவது, இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீள்வது என்று கவலைப்பட்டனர். இதுபோன்ற நலிவுற்ற வியாபரிகளுக்கு ஆதரவாக, ஒரு திருச்சபையின் போதகர் அவர்களுக்கு பண உதவி செய்ய முன்வந்தார்.
மற்ற போதகர்களையும் ஊக்குவிக்க எண்ணிய அவர், “ஒருவர் மழையில் நனைந்துகொண்டிருக்கும்போது, நாம் நம்மிடத்திலுள்ள மழைக்கால நிதியை வைத்துக்கொண்டு இளைப்பாறக்கூடாது” என்று வலியுறுத்தினார்.
மழைக்கால நிதி என்பது நம்முடைய இயல்பான வருமானம் தடைபடும் நேரத்தில் அதை சமாளிப்பதற்காக சேகரித்து வைக்கக்கூடிய நிதி. நம்முடைய தேவைகளை மனதில் வைத்து செயல்படுவது இயல்பு என்றாலும், நம்முடைய தேவையைத் தாண்டி மற்றவர்களுக்கு சேவை செய்யும் தயாள குணம் உள்ளவர்களாய் இருக்கும்படிக்கு வேதம் நம்மை ஊக்குவிக்கிறது. நீதிமொழிகள் 11, “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு… உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (வச. 24-25) என்று நினைவுபடுத்துகிறது.
இன்று உங்களுடைய வாழ்க்கையில் சூரியன் சற்று அதிகமாய் ஒளியூட்டுகிறதா? மற்றவர்களுடைய வாழ்க்கையில் மழை பெய்கிறதா என்று சுற்றிப் பாருங்கள். மற்றவர்களோடு தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை பகிர்ந்துகொள்ளும்போது அவைகள் நம்முடைய வாழக்;கையில் பெருகத்துவங்கும். உதாரத்துவமாய் விரிந்த கரங்களை காண்பிப்பது, மற்றவர்களுக்கு நம்பிக்கையையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவன் அவர்களை நேசிக்கிறார் என்னும் சத்தியத்தையும் பறைசாற்றும் மிக அழகான ஒரு வழி.
உங்களின் தேவையின் போது விரிந்த கரங்களோடு உங்களுக்கு தாராளமாய் மற்றவர்கள் உதவியது எப்போது? தேவையிலுள்ள ஒருவருக்கு அதேபோன்று இன்று நீங்கள் எப்படி உதவ முடியும்?
கிருபையுள்ள தேவனே, தேவையிலுள்ளவர்களுக்கு இரங்கும் மென்மையான இருதயத்தை எனக்குத் தாரும். உம்முடைய அன்பையும் தயாள குணத்தையும் அவர்களுக்கு பகிர்ந்துகொள்வது எப்படி என்று எனக்குக் காண்பியும்.