ஆறு ஆண்டுகளாய் ஏக்னஸ் தன்னை ஒரு நேர்த்தியான ஊழியரின் மனைவியாய் மாற்றிக்கொள்வதற்கு பிரயாசப்பட்டார். அவருடைய மாமியாரைப்போன்று (அவரும் போதகரின் மனைவி) தன்னை மாற்றிக்கொள்ள முயன்றாள். ஆனால் ஒரு ஊழியரின் மனைவியாய் தன்னுடைய எழுத்து திறமையையும் ஓவியத் திறமையையும் வெளிக்காட்ட முடியாது என்று எண்ணி அதை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டாள். அது அவளை தற்கொலைக்குத் தூண்டியது. ஒரு போதகரின் ஜெபத்தினால் அந்த இருளான சூழ்நிலையிலிருந்து அவள் விடுபட்டாள். அவர் அவளுக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் 2 மணி நேரம் எழுதக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். அதினால் அவள் விழிப்படைந்து, தேவன் அவளுக்குக் கொடுத்த அழைப்பை “முத்திரையிடப்பட்ட நியமனம்” என்று அழைக்கிறாள். அவள் இப்படியாக எழுதுகிறாள், “நான் நானாகவே இருப்பது என்பது – தேவன் எனக்குக் கொடுத்த திறமைகளை சரியாய் செயல்படுத்தும் வழியை கண்டறிவதாகும்.”
அவள் தன்னுடைய அழைப்பை எவ்வாறு தெரிந்துகொண்டாள் என்பதை தாவீதின் பாடல் வரிகள் மூலம் தெரிவிக்கிறாள்: “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4). அவள் தன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, தன்னை தேவன் வழிநடத்துவார் என்று அவர் மீது நம்பிக்கையாயிருந்தாள் (வச. 5). அவளுக்கு எழுதுவதற்கும் ஓவியம் வரைவதற்கும் மாத்திரமல்லாது, மற்றவர்களை தேவனிடத்தில் உறவாடச் செய்வதற்கும் தேவன் வழி செய்தார்.
நாம் அவருடைய பிரியமான பிள்ளைகள் என்பதை மட்டுமல்லாது, நம்முடைய தாலந்துகள் மற்றும் திறமைகள் மூலம் அவருக்கு இன்றும் நேர்த்தியாய் எப்படி ஊழியம் செய்வது என்பதைக் குறித்த “முத்திரையிடப்பட்ட நியமனங்களை” தேவன் வைத்துள்ளார். அவரை நம்பி, அவரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது அவர் நம்மை வழிநடத்துவார்.
மற்றவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்த ஏக்னஸின் இந்த கதை உங்களை எப்படி அதிர்ச்சியூட்டுகிறது? முத்திரையிடப்பட்ட நியமனங்களில் தேவன் உங்களுக்கென்று என்ன வைத்துள்ளார்?
சிருஷ்டி கர்த்தாவே, நீர் என்னை உம்முடைய சாயலாக சிருஷ்டித்துள்ளீர். உம்மை இன்னும் அதிகமாய் நேசிக்கவும், உமக்கு ஊழியம் செய்யும்படியாகவும் என் அழைப்பை உறுதியாய் பற்றிக்கொள்ள எனக்கு உதவிசெய்யும்.