அந்த கிராம பாதிரியாரால் தூங்க முடியவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது, அவர் அமெரிக்க ராணுவத்தினரின் ஒரு சிறிய குழுவிடம், இறந்துபோன வீரரர்களை தங்களுடைய ஆலயத்திற்கு அருகாமையில் வேலியிடப்பட்ட கல்லறையில் புதைக்க முடியாது என்று கூறியிருந்தார். ஆலயத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே அங்கு புதைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனால் ராணுவத்தினர் இறந்துபோன தங்கள் நண்பர்களை வேலிக்கு வெளியே புதைத்தனர். 

இருந்தாலும், அடுத்த நாள் காலையில் இராணுவத்தினர் தாங்கள் புதைத்த கல்லறையைக் காணமுடியவில்லை. ஒரு வீரன் பாதிரியாரிடம் “என்ன ஆனது கல்லறை காணாமல் போய்விட்டது” என்று கேட்டான். “ஓ அது இன்னும் அங்கே தான் இருக்கிறது” என்று பாதிரியார் கூறினார். ராணுவ வீரனுக்கு குழப்பமாக இருந்தது. அப்பொழுது பாதிரியார் “நேற்று உங்களுக்கு இங்கு இடமில்லை என்று சொன்னது எனக்கு வருத்தமாக இருந்தது. அதனால் இரவு எழுந்து வேலியை நகர்த்திவிட்டேன்” என்று விளக்கமளித்தார். 

நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களுக்கு தேவன் புதிய கண்ணோட்டத்தைக் கொடுக்கமுடியும். நாம் அதைத் தேடினால், ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு ஏசாயா தீர்க்கதரிசி கொடுத்த செய்தி இதுதான். அவர்கள் செங்கடலைக் கடந்ததை ஆவலோடு திரும்பிப் பார்ப்பதற்கு பதிலாக, தேவன் செய்யும் புதிய அற்புதங்களுக்கும், காட்டும் புதிய வழிகளுக்கும் தங்கள் பார்வையைத் திருப்ப வேண்டியிருந்தது. “முந்தினவைகளை நினைக்க வேண்டாம்.” இதோ நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்” (ஏசாயா 43:18-19) என்று சொல்லி தேவன் அவர்களை உற்சாகப்படுத்தினார். சந்தேகங்கள் மற்றும் யுத்தங்களின் மத்தியிலும் அவரே நம்முடைய நம்பிக்கையின் ஆதாரமாயிருக்கிறார். “நான் தெரிந்துக்கொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்தில் தண்ணீர்களையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும்… உண்டாக்குவேன்.” (வச. 20).

புதுப்பிக்கப்பட்ட கண்ணோட்டத்துடன், நாமும் தேவன் நம்முடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் புதிய திசைகளைப் பார்க்க முடியும். புதிய கண்களுடன் அவருடைய புதிய வழிகளைப் பார்ப்போம். பின்பு, தைரியத்துடன், புதியப் பாதையில் நாம் அடியெடுத்து, தைரியமாக அவரைப் பின்பற்றுவோம்.