டேரில் ஒரு பிரபலமான பேஸ்பால் விளையாட்டு வீரர். அவர் போதைப் பொருட்களால் தன்னுடைய வாழ்க்கையை அழித்தார். ஆனால் இயேசு அவரை விடுதலையாக்கி, அவர் பல ஆண்டுகளாக தூய்மையானவராய் இருக்கிறார். இன்றைக்கு அவர் இப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருக்கும் பலருக்கு உதவிசெய்து அவர்களை விசுவாசத்திற்குள் நடத்துகிறார். தன்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, தனது குழப்பத்திலிருந்து தேவன் தன்னை ஒரு செய்தியாக மாற்றியதை உறுதி செய்கிறார்.
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. கலிலேயாக் கடலில் புயலடித்த ஒரு இரவுக்குப் பின், இயேசு தன்னுடைய சீஷர்களுடன் கடற்கரை அருகிலுள்ள கல்லறையினிடத்திற்கு வந்தபோது, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு எதிர்கொண்டான். இயேசு அவனுக்குள் இருந்த பிசாசுகளிடம் பேசி, அவைகளைத் துரத்திவிட்டு, அவனை விடுதலையாக்கினார். இயேசு அவ்விடம் விட்டுப் பறப்படும்போது, தான் அவரோடே கூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். ஆனால் இயேசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை – ஏனென்றால் அவருக்காக அவன் செய்யவேண்டிய வேலை இருந்தது. “நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப் போய் கர்த்தர் உனக்கு செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவி” (மாற்கு 5:19) என்று சொன்னார்.
மீண்டும் அந்த மனிதனைப் பற்றி ஒன்றும் எழுதப்படவில்லை. அனால் அவனைப் பற்றி புதிரான சிலவற்றை வேதாகமம் காட்டுகிறது. அந்தப் பகுதியில் இருந்த மனிதர்கள் இயேசுவை தங்கள் எல்லையை விட்டுப் போகும்படி பயத்தோடே வேண்டிக்கொண்டார்கள் (வச. 17). ஆனால் மீண்டும் அவர் அந்த இடத்திற்கு வந்தபோது திரளான ஜனங்கள் கூடிவந்தார்கள் (8:1). அந்த மனிதனை தேவன் அனுப்பினதால் இந்த திரள்கூட்ட மக்கள் வந்திருப்பார்களோ?
ஒரு காலத்தில் இருளின் ஆதிக்கத்தில் இருந்தவர், முதல் ஊழியக்காரரர்களில் ஒருவராக இருந்தவர், இயேசுவின் இரட்சிக்கும் வல்லமையை திறம்பட தெரிவித்ததினாலோ?
பரலோகத்தின் இந்தப் பகுதியை நாம் ஒருபோதும் அறிய முடியாது. ஆனால் இது மட்டும் தெளிவாயிருக்கிறது. தேவன் அவருடைய ஊழியத்தைச் செய்ய நம்மை விடுவிக்கும்போது, நம்முடைய குழப்பமான கடந்தக் காலத்தை, அன்பு மற்றும் நம்பிக்கையின் செய்தியாக மாற்றமுடியும்.
இயேசு உன்னை எதிலிருந்து விடுதலையாக்கியிருக்கிறார்? அவர் உனக்குச் செய்ததை நீங்கள் எப்படி மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வீர்கள்?
அழகான இரட்சகரே, உம்முடைய அற்புதமான வல்லமைக்காக உம்மைத் துதிக்கிறேன். எந்த இருளும் உமக்கு எதிராக நிற்க முடியாது. இன்று உம்முடைய வெளிச்சத்தில் நடக்க உதவி செய்யும்.