நாங்கள் எங்களை “கிறிஸ்துவில் சகோதரிகள்” என்று சொல்லிக்கொண்டாலும் என்னுடைய வெள்ளை நிற சிநேகிதியும் நானும் எதிரிகளாகவே இருந்தோம். ஒரு காலை சிற்றுண்டியின்போது, எங்கள் நிறவேற்றுமையைக் குறித்து இரக்கமின்றி விவாதித்தோம். அதற்கு பின்பு, இனி ஒருவரையொருவர் சந்திக்கவே மாட்டோம் என்று சொல்லி பிரிந்தோம். ஒரு ஆண்டு கழித்து, ஒரு ஊழியத்தில் ஒரே துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், நாங்கள் சந்திக்காமல் இருக்கமுடியவில்லை. முதலில் எங்கள் சண்டையைக் குறித்து பேசத் துவங்கினோம். பின்பு, நாங்கள் ஒருவரிடம் ஒருவர் மன்னிப்புக்கோரினோம். நாங்கள் இணைந்து ஊழியத்தை நன்றாய் செய்வதற்கு தேவன் உதவினார்.
தேவன் ஏசாவுக்கும் அவனுடைய உடன்பிறந்த சகோதரன் யாக்கோபுக்கும் இடையிலான கசப்பையும் குணமாக்கி, அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் ஆசீர்வதித்துள்ளார். ஒரு கட்டத்தில், யாக்கோபு ஏசாவை வஞ்சித்து, தகப்பனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான். ஆனால் இருபது ஆண்டுகள் கழித்து, யாக்கோபை தன் சொந்த திரும்பும்படி தேவன் அழைத்தார். ஆகையினால், யாக்கோபு ஏசாவை சமாதானப்படுத்தும் பொருட்டு அநேக வெகுமதிகளை முன்பே அனுப்புகிறான். ஆனால் ஏசா யாக்கோபிடத்தில் ஓடிவந்து அவனை கட்டித் தழுவுகிறான். “அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் ; இருவரும் அழுதார்கள்” (ஆதி. 33:4).
இவர்களின் அந்த ஒப்புரவாகுதல் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு வெகுமதிகளையும் பொக்கிஷங்களையும் கொடுப்பதைப் பார்க்கிலும், முக்கியமானது என்பதை வலியுறுத்தும் அழகான மாதிரியாய் செயல்படுகிறது (மத். 5:23-24). “முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (வச. 24). ஏசாவோடு ஒப்புரவாகியதின் மூலம் யாக்கோபு தேவனுக்கு கீழ்ப்படிந்து, பின்பு அவருக்காக ஒரு பலிபீடத்தை நாட்டினான் (ஆதியாகமம் 33:20). என்ன அழகான ஒரு திட்டம்: முதலில் மன்னிப்பிற்காகவும் ஒப்புரவாக்குதலுக்காகவும் பிரயாசப்படு. பின்பு, அவர் நம்மை அவருடைய பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளுகிறார்.
யாருக்கு விரோதமாய் உங்களுக்கு கசப்பு இருக்கிறது? ஒப்புரவாவதற்கு நீங்கள் என்ன முயற்சியெடுத்தீர்கள்?
அன்பான தேவனே, இன்னொரு விசுவாசிக்கு விரோதமாய் எனக்கு மனக்கசப்பு இருக்கிறது என்றால், உம்முடைய பலிபீடத்திற்கு போவதற்கு முன்பு அவர்களை மன்னிக்க எனக்கு தயை செய்யும்.